சிறை நிரப்பும் போராட்டம்; ஆயிரக்கணக்கில் முஸ்லீம்கள் திரண்டனர்

செவ்வாய், 28 ஜனவரி 2014 (17:01 IST)
FILE
தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் சார்பில் சென்னையில் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் சென்னை எழும்பூரில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து பஸ், வேன், கார்களில் தொண்டர்கள் குவிந்தனர்.

எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆயிரக்கணக்கான பேர் திரண்டதால் போலீசார் போக்குவரத்தை மாற்றி விட்டனர்.

முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பில் மத்தியில் 10 சதவீதமும், மாநிலத்தில் 7 சதவீதமும் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

மாநில தலைவர் ஜெய்னூல் ஆபுதீன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். கூட்டம் அதிகமானதால் லட்சுமி ருக்குமணி சாலையில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டது. இதனால் எழும்பூரை சுற்றியுள்ள பிறசாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்