சினிமா பாணியில் திருடர்களை விரட்டி பிடித்த எஸ்.ஐ.

வெள்ளி, 14 மார்ச் 2014 (09:08 IST)
FILE
செயின் பறிப்பு கொள்ளையர்களை 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று, காவல் துணை ஆய்வாளர் மடக்கிப்பிடித்தார்.

சென்னை பெரம்பூர் ஜவஹர் நகர் பகுதியில் வசிப்பவர் சிவகுமார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி பெயர் ஜெயதேவி (வயது 34). நேற்று பகல் 12 மணி அளவில், சிவகுமார், அவரது மனைவி ஜெயதேவி மற்றும் குழந்தையுடன், ஜவஹர் நகர், 4-வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ஜெயதேவி கழுத்தில் கிடந்த 4½ சவரன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றனர். ஜெயதேவி கூச்சல் போட்டார். இதை பார்த்த பொதுமக்களும் கூச்சல் போட்டு கூட்டத்தை கூட்டினார்கள்.

அப்போது அந்த வழியாக பெரவள்ளூர் காவல்நிலைய துணை ஆய்வாளர் ராஜேந்திரபிரசாத், மோட்டார் சைக்கிளில் ரோந்து வந்தார். சம்பவத்தை பார்த்த அவர், தனது மோட்டார் சைக்கிளில் செயின் பறிப்பு ஆசாமிகளை விரட்டிச்சென்றார். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று, செயின் பறிப்பு ஆசாமிகளை மடக்கிப்பிடித்தார்.

அவர்கள் ஜெயதேவியிடம் பறித்த தங்க சங்கிலியும் மீட்கப்பட்டது. பிடிபட்ட செயின் பறிப்பு ஆசாமிகள் பெயர் அப்துல்ரஷீத் (40), கருணாநிதி (43) என்று தெரிய வந்தது. இவர்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் தான். கருணாநிதி அயனாவரத்தில் டிபன் கடை வைத்துள்ளார். அப்துல்ரஷீத், தனது சொந்த காரை கால் டாக்சி நிறுவனம் மூலம் ஓட்டி வந்தார். இவர்கள் இருவரும் முதல் முறையாக செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். போதையில் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக, இருவரும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

செயின் பறிப்பு ஆசாமிகளை 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று பிடித்த, துணை ஆய்வாளர் ராஜேந்திரபிரசாத்தை, நேரில் தனது அறைக்கு வரவழைத்து ஆணையர் ஜார்ஜ் பாராட்டினார். புளியந்தோப்பு துணை ஆணையர் சுதாகர், உதவி ஆணையர் ஜான்ஜோசப் ஆகியோரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்