காணாமல் போனவர் காதல் தகராறில் அடித்து கொலை

சனி, 8 பிப்ரவரி 2014 (16:01 IST)
FILE
தூத்துக்குடி அருகே காணாமல் போனதாக கருதப்பட்ட இளைஞர் காதல் தகராறில் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார்கற்குளம் சேர்ந்தவர் இசக்கிமுத்து என்ற துரையில் மகள் சோனியா (19). இவரது உறவினர் ஏரல் கணேசன் மகன் ஸ்ரீராம் (24). இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதால், ஊர்க் கோவில் கொடைக்கு வந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். இவர் தூரத்து அண்ணன் முறை உறவில் வரும் என்பதால் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கத்துக்கு இசக்கிமுத்து எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், சோனியாவும் ஸ்ரீராமும் திடீரென்று காணாமல் போனார்கள். இது தொடர்பாக 2013 அகஸ்ட் 2 ஆம் தேதி இசக்கிமுத்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதனிடையே ஸ்ரீராம், அவரது அக்கா செல்வியின் வீட்டில் தங்கியுள்ளார். இதை அடுத்து, மதுரை பழங்காநத்தத்தில் வசித்து வரும் செல்வியின் கணவர் சிவா, செல்வி, ஸ்ரீராம் மூவரும் தங்களது மகளை கடத்தி வைத்துள்ளதாக ஒரு புகாரைப் பதிவு செய்தார் இசக்கிமுத்து.

இந்நிலையில், ஜோடிகள் இருவரும் 3.9.2013ல் சென்னை ராயபுரத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துள்ளனர். இதை அடுத்து, 2.9.2013ல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார் பேச்சிமுத்து. இதனால், மகளைக் காணவில்லை என்று கூறி தாக்கல் செய்த இந்த ஆட்கொணர்வு மனு அடிப்படையில், 29.9.2013 ல் ஆஜர் ஆனார் சோனியா. அப்போது அவர், அப்பாவுடன் செல்கிறேன் என்று கூறியதை அடுத்து, இசக்கிமுத்துவுடன் அனுப்பி வைக்கப்பட்டார். சோனியாவை அவரது தந்தை அழைத்துச் சென்ற பிறகும், இருவரும் செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டு வந்தனராம். இதையடுத்து, இருவருக்கும் ஊர் முன்னிலையில் திருமணம் செய்து வைப்பதாகச் சொல்லி, ஊருக்கு வருமாறு ஸ்ரீராமிடம் சொல்லியிருக்கிறார் இசக்கிமுத்து.

அதன்படி 8.10.2013ல் ஸ்ரீராம் வல்லநாட்டில் பேருந்தில் வந்து இறங்கியிருக்கிறார். அங்கிருந்தபடி, அவரது அக்கா செல்விக்கு போன் செய்து, வல்லநாட்டில் உள்ளேன். அவர்கள் வீட்டுக்குச் சென்று பேசிவிட்டு வருகின்றேன் என்றாராம்.

ஆனால், அதன் பின்னர் ஸ்ரீராம் காணவில்லை என்பதால், செல்வி தனது தம்பியைக் காணவில்லை என்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்துக்கு கொரியர் மூலம் புகார் அனுப்பி வைத்தார்.

இதையடுத்து, எஸ்பி துரை உத்தரவின் பேரில் தனிக்காவல் படை இது குறித்து விசாரித்து வந்தனர்.

போலீஸார் தேடுவது தெரிந்து இசக்கிமுத்து மற்றும் ஆழ்வார்கற்குளத்தைச் சேந்த நயினார் மகன் சுப்பிரமணியன் இருவரும் நெல்லை மாவட்டம் செங்கோட்டை நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர். மேலும், பேச்சிமுத்து மகன் ராமசாமி சாயர்புரத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சுரேஷிடம் சரண் அடைந்தார். அவரை போலீஸில் அவர் ஒப்படைத்துள்ளார்.

போலீஸாரின் விசாரணையில், ஆழ்வார்கற்குளத்துக்கும் மணக்கரைக்கும் நடுவில் உள்ள தோட்டத்தில் வைத்துப் பேசிய போது, தகராறு வெடித்ததாகவும், இசக்கிமுத்து, இசக்கிமுத்து மகன் ஸ்ரீகாந்த், பாளை தங்கராஜா ஆகியோர், இரும்புக் கம்பியால் அடித்ததில் ஸ்ரீராம் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

ராமசாமியிடம் விசாரித்த போது, டிஜிட்டல் போர்ட் பேனரில் உடலைக் கட்டி கொண்டு போனார்கள்; என்ன செய்தார்கள் என்று தெரியாது என்று கூறியுள்ளார். இதை அடுத்து, சுப்பிரமணியன், இசக்கி முத்து இருவரும் காவல்துறையினர் விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதனால், காணாமல் போனதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவர் கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்