ரயிலில் வழங்கும் உணவில் தரக் குறைவா? விற்பனையாளர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்

செவ்வாய், 8 ஜூலை 2014 (21:41 IST)
ரயிலில் பரிமாறப்பட்ட உணவில் தரக் குறைவு அல்லது சுகாதாரக் குறைவு ஏதேனும் இருந்ததால் உணவு விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் ஒப்பந்தமும் ரத்து செய்யப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் டி.வி. சதானந்த கௌடா 2014 ஜூலை 8 அன்று தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் தெரிவித்தார். 
 
முக்கிய ரயில் நிலையங்களில் உணவு பூங்கா அமைக்கப்படும். இந்த உணவுப் பூங்காவில் தங்களுக்குத் தேவையான உணவுகளைப் பயணம் செய்யும் பொழுது, மின் அஞ்சல், குறுஞ்செய்தி, ஸ்மார்ட் போன்கள் மூலம் முன்பதிவு செய்யலாம். இந்த முன்னோடி திட்டம், புது தில்லி- அமிர்தசரஸ், புதுதில்லி - ஜம்மு தாவி வழித் தடங்களில் துவக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். 
 
மேலும் அமைச்சர் தெரிவித்ததாவது:-
 
நம்பிக்கைக்குரிய ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்த பிரபல நிறுவனங்களின் உடனடியாக சாப்பிடத் தயாரான உணவுகள் அறிமுகப்படுத்தப்படும். மேலும், உணவு சேவையை மேம்படுத்த என். ஏ.பி.சி.பி சான்று பெற்ற முகமைகள் மூலம் உணவின் தர உறுதிப்பாடு முறை செயல்படுத்தப்படும். இதைத் தவிர்த்து, ஐ.வி.ஆர்.எஸ் செயல்பாடு மூலம் பரிமாறப்பட்ட உணவின் தரத்தைக் குறித்து பயணிகளிடமிருந்து கருத்து சேகரிப்பதற்கான திட்டம் விரைவில் கொண்டுவரப்படும். பரிமாறப்பட்ட உணவில் தரக் குறைவு அல்லது சுகாதாரக் குறைவு ஏதேனும் இருந்ததால் உணவு விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் ஒப்பந்தமும் ரத்து செய்யப்படும். 
 
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்