புல்லட் ரயில் மற்றும் உயர் வேக வைர நாற்கர ரயில்

செவ்வாய், 8 ஜூலை 2014 (20:19 IST)
மும்பை- அஹமதாபாத் இடையே புல்லட் ரயில் சேவையை துவக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்று மத்திய ரயில்வே அமைச்சர் டி.வி.சதானந்த கௌடா, 2014 ஜூலை 8 அன்று 2014-15ஆம் ஆண்டுக்கான ரயில்வே நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய போது தெரிவித்தார்.

 
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் ரயில்வே கட்டமைப்பை நவீனப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் முக்கிய பெரு நகரங்களையும் வளர்ச்சி மையங்களையும் உயர் வேக ரயில் மூலம் இணைக்க வகை செய்யும் வைர நாற்கர கட்டமைப்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ 100 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும். 
 
புல்லட் ரயில் சேவைக்கு முற்றிலும் புதிய கட்டமைப்பு தேவைப்படும். அதே சமயத்தில் தற்போதுள்ள உயர் வேக ரயில்களுக்கான கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் இது எட்டப்படும். எனவே, குறிப்பிட்ட பிரிவுகளில் ரயில்களின் வேகம் மணிக்கு 160 முதல் 200 கி.மீ வரை அதிகரிக்கப்படும். இதன் காரணமாக முக்கிய பெரு நகரங்களுக்கு இடையே பயண நேரம் குறையும்.
 
1. தில்லி- ஆக்ரா
2. தில்லி- சண்டிகர்
3. தில்லி- கான்பூர்
4. நாக்பூர்- பிலாஸ்பூர்
5. மைசூர்- பெங்களுரு - சென்னை
6. மும்பை- கோவா
7. மும்பை- அஹமதாபாத்
8. சென்னை- ஹைதராபாத்
9. நாக்பூர்- செகந்திராபாத்
 
ஆகிய நகரங்கள் இதற்காகக் கண்டறியப்பட்டுள்ளன என்று ரயில்வே அமைச்சர் சதானந்த கௌடா தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்