தூக்கமின்மையால் மனோநிலை பாதிக்கும்?

திங்கள், 1 பிப்ரவரி 2016 (20:23 IST)
பொதுவாக பிறந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்கும். பசி எடுக்கும் போது கண் விழித்து பால் அல்லது திரவ உணவு வகைகளை சாப்பிட்ட பின் மீண்டும் தூங்கும் இயல்பு கொண்டவை.


 

 
அதுவே ஒரு வயதானால், குழந்தைகளின் தூக்கம் குறையும். திரவ உணவு மாறி, இட்லி, பருப்பு சாதம், பிஸ்கட் போன்ற திட உணவுப் பொருட்களை குழந்தைகள் சாப்பிடத் தொடங்குகின்றன.
 
ஒரு வயது முதல் 3 வயது வரை அன்றாடம் பகல் நேரங்களில் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தைகள் தூங்க நேரிடும்.
 
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளானால், மதியம் பள்ளிக்கூடம் இல்லாத நேரங்களில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பர். மேலும் 12 முதல் 13 மணி நேரம் வரை தூங்கக்கூடும்.
 
5 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு குறைந்தது 9 மணி நேரமாவது தூங்க வேண்டியது அவசியமாகிறது.
 
வளர்ந்து பெரியவர்களாகி விட்டாலோ, 7 முதல் 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது.
 
35 வயதைக் கடந்தவர்கள் 6 மணி நேரமாவது ஆழ்ந்த நித்திரை கொள்ள வேண்டும். அப்போது தான் உடல் நலமும், மன நிலையும் சரிவர செயல்பட்டு. உரிய பணிகளை செவ்வனே செய்ய முடியும்.
 
மன நலத்துடன் தொடர்புடையது தூக்கம் என்றால் அது மிகவும் சரி.
 
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் அளிக்கப்படும் மருந்து, தூக்கத்திற்கானதே.
 
போதிய அளவு தூக்கம் இல்லாததே பல நேரங்களில் மனோரீதியாகப் பாதிப்புக்குள்ளாக காரணமாகி விடும்.
 
மனோநிலை பாதிக்கப்பட்டவர்கள் சில நேரங்களில் புலம்ப நேரிடும். அப்படிப் புலம்புவர்களுக்கு தூக்கமே மிகச் சிறந்த மாற்று மருந்தாகும். எனவே தூக்கத்திற்கான மருந்துகளை, மனோதத்துவ நிபுணர்கள் அளிப்பர். 
 
அதன் பின்னரே அவர்களுக்கு கவுன்சலிங் எனப்படும் கலந்தாய்வை மேற்கொள்வர்.
 
எனவே 2, 3 மணி நேர தூக்கம் போதும் என்று எண்ணாதீர்கள். தவிர, சிலருக்கு இரவு வெகுநேரம் டி.வி. பார்க்கும் வழக்கம் இருக்கும். அதுபோன்றவர்கள் காலையில் அதிக நேரம் தூங்குவார்கள்.
 
பின்னர் அவசரமாக எழுந்து, அலுவலகத்திற்குத் தாமதமாகச் செல்வதையும் பார்க்கிறோம்.
முதலில் இரவில் வெகுநேரம் கண் விழிப்பதால், அவர்களின் உடல் சூடு அதிகரித்து பல்வேறு தொந்தரவுகள் ஏற்படக்கூடும்.
 
காலையில் தாமதமாக எழுந்திருப்பதால், சரிவர உணவருந்த முடியாமல் போகலாம். அதுவே அசிடிட்டி போன்ற உடல் பாதிப்புகளை ஏற்படுத்த காரணமாக அமைந்து விடுகிறது. 
வேலைக்கு அவசரமாகவும், ஒரு டென்ஷனோடும் புறப்பட்டுச் செல்வதால், அன்றைய தினம் மேற்கொள்ள வேண்டிய சில பணிகளை மறந்து விட நேரிடுகிறது. அலுவலகத்திற்குச் சென்றாலும் டென்ஷனே நீடிக்கும். இதனால் உடல் பாதிப்படைகிறது.
 
எனவே தூக்கமின்மையானது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதோடு மனோநிலை பாதிப்படைய முக்கியக் காரணமாகிறது.
 
இரவில் போதிய அளவு தூங்குங்கள்! உடல் ஆரோக்கியமாக இருங்கள் !!

வெப்துனியாவைப் படிக்கவும்