நீயும் எமக்கு துணையிலையோ!

சனி, 12 ஜனவரி 2008 (17:58 IST)
webdunia photoFILE
பூமித் தாயின் நிரந்தரக் கருணாயல்
நிலத்தில் நின்ற ஈரத்தை நம்பி
ஆழ உழுது நாற்று நட்டு
முளைத்தெழும் வேளையில் பெய்தது மழை

உலகத்தை முன்னேற்றிய தொழில்களும்
தொழிற்சாலைகளும் விட்ட சுவாசத்தால்
காற்று மண்டலம் மாசடைந்துப் போய்
புவியின் வெப்பநிலை உயர்ந்துள்ளதாம்

அதனால் ஏற்பட்ட பருவ பாதிப்பு
பருவம் தவறிய பருவ மழையாகி
விவசாயியின் வாழ்வில் வந்து விடிந்து
பொய்த்துப் பிறகு கொட்டித் தீர்த்தது

தொழில்நுட்பம் விட்ட மூச்சுக் காற்றில்
உன் மடியில் தவழும் விவசாயம்
மூச்சுத் திணறி விழி பிதுங்கிக்கிடக்க
வேண்டாத நேரத்தில் பெய்தது மழை

கதிர் பூத்து முற்றும் வேளையில்
காற்றையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு
அழிப்பேன் என்று அடாது பெய்த மழையால்
விளைந்த நெற்கதிர் தள்ளாடியது வெள்ளநீரில்

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயிலாண்டி
உலகிற்கு இளைத்தவன் விவசாயி தானோ
உன் உறவு உன் சுற்றம் நாங்கள்
காப்பாற்றி கரையேற்றித் தேற்றிடுவாய்த் தாயே

துணிந்து செய்த நிலைமாறி விவசாயம்
இன்று பயந்து செய்யும் தொழிலானது
சோற்றுக்கும் பாட்டுக்கும் கவலையற்ற நிலைமாறி
இன்று மிரட்சியில் உழல்கிறது விவசாயி வாழ்க்கை

குல தெய்வங்களுக்கு கிடா வெட்டி
காவல் தெய்வங்களுக்கு காவடி எடுத்து
கோயில் தெய்வங்களுக்கு விழா கொண்டாடி
பூமியை நம்பி வாழ்ந்திடும் மக்கள் நாங்கள்

வெள்ளத்தில் இருந்து ஈரப்பதத்துடன்
பிடுங்கிய நெல்லை சீராக்கி அரிசியெடுத்து
சூரியனை நோக்கிப் பொங்கலிட்டு
படைக்கின்றோம் உன் அருள் வேண்டி

சர்க்காரும் நிர்வாகமும் கூடநிற்காத எங்களுக்கு
நீ மட்டும்தான் தாயே இயற்கை அன்னையே
என்றென்றும் எங்களின் மானம் காக்கும் வேட்டி
அண்ணாந்து கும்பிடுகிறோம் நின்னருள் வேண்டி

நெல்லையும் எள்ளையும் விதைப்பதன்றி
வேறெதையும் விதைத்தறியாத எங்களுக்கு
புல் பூண்டு உயிரற்றுப் போகும் பூமியில்
போவதற்கு வாழ்வெங்கே கூறிடு தாயே

அருள் செய்வாய் தைத்திருநாள் இன்று
பிறக்கட்டும் எமது வாழ்விலும் புது வாழ்வு!

வெப்துனியாவைப் படிக்கவும்