கரை ஒதுங்கிய சிறுவன் ’அய்லன் குர்தி’க்கு அஞ்சலி

சத்யன்

திங்கள், 14 செப்டம்பர் 2015 (12:59 IST)
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் காரணமாக அந்நாட்டு மக்கள் துருக்கி வழியாக அண்டை நாடான ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். அப்போது, துருக்கியில் படகுகள் மூழ்கியதால் அயிலன் குர்தி உட்பட 12 பேர் துருக்கிக் கடற்பரப்பில் மூழ்கி உயிரிழந்தனர்.
 

 
மேலும், துருக்கிய கடற்பரப்பில் மூழ்கிய மூன்று வயது சிரிய நாட்டுச் சிறுவனின் புகைப்படம் உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அவனது மரணம் குறித்த ஓர் அஞ்சலி..

அய்லன் இறந்துவிட்டான்..
அய்லன் இறந்துவிட்டான்...
 
எனது மகனே!
உன் சகோதரனை கொன்றுவிட்டார்கள்.
 
என் உடல் நடுங்குகிறது
என் விரல்கள் தடுமாறுகின்றன
என் மன அழுத்தம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது..

அய்லன் இறந்துவிட்டான் எனது மகனே!
உன் வயதுதானிருக்கும்,
உன்னைப் போன்றே அழகானவன்,
உனது பிஞ்சு விரல்களைப் போலவே,
உனது பால்மனத்தின் உதடுகளைப் போலவே,
உனது துள்ளித்திரியும் கால்களைப் போலவே..
 

 
அந்தச் சின்னஞ்சிறிய முயல்குட்டி
அங்கே இறந்து கிடக்கிறது..
அலைநீரில் கரை ஒதுங்கிய
அந்த விறைத்த உடல்
 
அய்யோ!
குர்தி நான் என்ன செய்வேன்
 
அந்த அழகிய சிற்பம்
அப்படி கிடப்பது
என்னை நிலைகுலைய வைக்கிறது
 
கரையொதுங்கிய சின்னஞ்சிறு மீனோ
காக்கையோ அல்லவே நீ!
மனித ரத்தம்
மனித சிசு
எனது மகன்
எனது சந்ததி
 
உன்னை காப்பாற்ற முடியாத
உன்னை வாழவைக்க முடியாத
இந்த பரந்த உலகத்தில்
நீ நிம்மதியாக உறங்க
ஒரு சிறிய இடத்தைக்கூட
அளிக்க முடியாத எங்கள் நிலை
இந்த மனித நிலை / மந்த நிலை
சீ! கேவலம்


 
இந்த உலகமே ஒரு வெட்கக்கேடான பொருள்
இந்த வாழ்வே ஒரு விஷம்
எல்லா வகையிலும் இதை வெறுக்கிறேன்..
 
மூடர்களே! போதும் நிறுத்திக் கொள்ளுங்கள்
இந்த உலகத்தில் உங்களுக்கு என்னதான் வேண்டும்?
பணத்திற்கும், அதிகாரத்திற்குமான
உங்கள் வெறிக்கு ஒரு அளவே இல்லயா?
 
இன்னும் எவ்வளவு ரத்தம்..
இன்னும் எவ்வளவு குழந்தைகள்...
போதும் நிறுத்திக் கொள்ளுங்கள்...
 
மனித சிந்தை அற்ற ஓநாய்களாக
நீங்கள் மாறிவிட்டீர்கள்
ஆதிக்க வெறியும், பேராசையும் கொண்ட
உங்கள் செயல்கள்
இந்த பூமியை நடுங்க செய்கின்றன..
 
ஆட்சியாளர்களாகிய, பணக்காரர்களாகிய
உங்களின் கெடுதல்களுக்கும்
ஒரு முடிவு உண்டு!..
 
எங்கள் குழந்தைகளின் ரத்தத்தில் நடந்து
இந்த உலகத்தின் சிம்மாசனத்தில்
நீங்கள் அமர விரும்புகிறீர்கள்...
 
இந்த கணக்கும்
ரத்தத்தாலேயே தீர்க்கப்படும் கனவான்களே!
இந்த உலகை அமைதிக்கு கொண்டுவர
அதில் உண்மையை உறுதி செய்ய
நாங்களும் உங்களுக்கு எதிராய் வலிமையடைவோம்...
 
அய்லனுக்கும், அவனைப் போன்ற
எத்தனையோ சிசுக்களின் ஆன்மாவிற்கும்
பழி தீர்க்கப்படும்
கண்டிப்பாய் தீர்க்கப்படும்...
 
அதுவரையில்,
ஐரோப்பிய பாசாங்கு,
அமெரிக்க நாடகம்,
எல்லாவற்றையும் நீங்கள் நடத்துங்கள்..
 
இதன் இறுதி காட்சியில்
உங்கள் வேடங்கள் கலைக்கப்படும்..
உங்களின் ஆட்சி பிடுங்கப்படும்..
 
உங்களுக்கும் உங்கள் சமுதாயத்திற்கும்
மக்கள் மரண தண்டனை அளிப்பார்கள்...
அய்லன் ஆன்மா சாந்தியடையும்....

வெப்துனியாவைப் படிக்கவும்