காதில் சுவர்கள்

Webdunia

புதன், 5 டிசம்பர் 2007 (16:36 IST)
லாகிரி லஹரியில் சுழலுவோம் வா என்று
அழைக்கும்போது வாய் இருந்தது அதற்கு;

அழைப்பை ஏற்று சென்றால்,
கைகள் உபகரணமாகி வாயே புனலாகி, உடலாகி,
தின்றதை மென்றது; மென்றதைத் தின்றது
அசைபோடும் கட்டின மாடாய்;

நுண்மான் நுழைபுலங்களை அன்றைய பொழுதுக்காய்,
பொழுதுபோக்கிற்காய் கேட்க, வாய் தன் வேலையைப் பார்க்க
சுவர்களுக்கும் முளைக்கும், அந்த வேளைகளில் காதுகள்!

பின்பு ஒரு நாள் லாகிரி பிரபுத்துவத்திற்காய்
பெருமை கொண்டு அனைவரிடமும் பிரசங்கித்து, துதிமாரியில் லயிக்கும்;
பூனைகள், அணில்கள், பூச்சிகள் புழுக்கள் வண்டுகள் காக்கைகள் ஏறி விளையாடுவதை,
பயன்படுத்தி வேறிடம் செல்வதை கையாலாகாத்தனத்துடன் வெறித்து நிற்கும்.

தன் கீழே ஓடும் சாக்கடைகளை நதிகள் என மயங்கும்.
என்றேனும் விமர்சனச் சூடு தாங்கவில்லையெனில்
சரக்கு மழைக்கு உடல் சுவர் ஈரம் சிந்தி நிற்கும்.
சில வேளைகளில் தன் மீது வெள்ளையடிக்கவும, பல வேளைகளில்
காறை உதிர்க்கவும் தன்னைக் காட்டி நிற்கும்.
அருகில் சென்று அடைக்கலமாவோர் மீது விழுந்து நசுக்கும்.
சாணி, விரட்டி, தசை விற்பனை நீலப்பட போஸ்டர்களுக்கும்
சிறுநீர் கழிவுகளுக்கும் இடம் கொடுத்து பெருமை கொள்ளும்.
கயவர்கள்,திருடர்கள் தப்பிச்செல்ல காத்து உதவும்.

எந்த ஒரு வடிவமோ தன்னுள்ளே வேறுபடுத்திக்
கூறுகாணும் தன்மையோயின்றி நீளக்க நெடுக்க விகாரமாய் நிற்கும்;

பூமிப் பிளவுண்டால்தான் நமக்கு விரிசல் கூட ஏற்படும் என்ற
சிறப்புப் பொருளாதார இறுமாப்பு கொள்ளும்;

எதற்கும் அசையாமல், இடத்தை விட்டு நகராமல்
பிறருக்கும் வழி விடாமல் சுய இறுமாப்பு நிச்சலன நிலையில்
காதில் சுவர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்