கலைவாணியே… 3

சனி, 5 ஜனவரி 2008 (14:37 IST)
திருத்தொண்டன் நான்புரியும் திருபூஜை தன்னை
மனங்கொண்டு ஏற்றிடுவாய் கவிகாக்கும் அன்னை
வீருகொண்டு கவியேற்றும் சிறுபிள்ளை என்னை
கூறுகண்டு போற்றிடுவாய் கலைமகளே என்னை

ஒளியெல்லாம் உன்போல ஒளிராது என்றும்
ஒலியெல்லாம் உனைபோல ஒலிக்காது இன்றும்
மொழியெல்லாம் உன்போல இனிக்காது என்றும்
கலைச்செல்வி உன்புகழோ அழியாது என்றும்

முத்தமிழை உலகிற்கு அளித்தாயே அம்மா
இரத்தமெல்லாம் தேன்தமிழை நிறைத்தாயே அம்மா
புத்தியிலே உன்நினைவை வளர்த்தேனே அம்மா
பித்தனெனை வித்தகனாய் உணர்ந்தேனே அம்மா

பூமியிலே பிறந்தயென்னை கவியெழுத வைத்தாய்
ஊமையெனை வரத்தாலே சுரம்பாட வைத்தாய்
நாமகளே நாதன்எனை கவியாக்கி பார்த்தாய்
என்மதியை உன்மதியால் நூலாக்கித் தைத்தாய்

கலைவாணியே… 4

கவிமழையில் நனைந்திடுவா கலைமகளே நிதமும்
கடலலையில் உன்சிரிப்பை பார்த்திடுவேன் தினமும்
பூக்களிலே உன்முகத்தை காட்டிடுவாய் நாளும்
பாக்களிலே உன்னுருவம் கண்டிடுவேன் நானும்

மனமுருகி கவியெழுதி மனங்குளிர வைப்பேன்
கனவினிலும் உன்புகழை அரங்கேறச் செய்வேன்
பகலிரவாய் கண்விழித்து பாட்டெழுத முனைவேன்
மனநிறைவாய் கவிமகளை கரம்கூப்பி தொழுவேன்

விதவிதமாய் காட்சிவரும் உனைஎண்ணிப் பார்த்தால்
ஒருவிதமாய் மயக்கம்வரும் உன்பெயரைக் கேட்டால்
சுரம்சுரமாய் தேடிவரும் உன்மனதை நினைத்தால்
சரம்சரமாய் தோடியாகும் உன்புகழைக் கோர்த்தால்

வானம்வரை அடுக்கிடுவேன் நான்வடிக்கும் நூலை
வாழும்வரை தொடுத்திடுவேன் நாதனது வேலை
வாடும்வரை கொடுத்திடுவேன் உனக்கான நாளை
வாழ்த்திடநீ வந்துவிடு தினந்தோறும் காலை

வெப்துனியாவைப் படிக்கவும்