எரிவையர் குறித்து

திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (10:30 IST)
நூற்பா யாப்பில் நுண்பகுப்பு விமர்சனம்

நோயல் ஜோசப் இருதயராஜ்

webdunia photoWD
[பெண் கவிஞர்களில் இன்று சிறு பத்திரிக்கை தளத்தில் உரத்த குரலில் பெ‌ண்களின் உடல் மொழியை எழுவதற்கான தேவையை வலியுறுத்தி வருபவர் குட்டி ரேவதி, அவரது சமீபத்திய கவிதைத் தொகுதிகளில் இந்தக் குரல் உரத்து ஒலித்து வருகிறது. மண்டைக்குள்ளே பற்றிய அந்தப் பொறியை பரபரவென்று எரித்துப்பரப்புவோம் என்று ஒரு வரியை இவர் எழுதப்போக, நோயல் இருதயராஜ் தனது தகர்ப்பு விமர்சன தேவதையை இந்த வரிகளின் பக்கம் திருப்பி, அகழ்ந்தாய்ந்து சென்று தீ பற்றிய தத்துவ, விஞ்ஞான, இலக்கிய, மரபு உட்பொருள்களை தனது சொற்றொடரியல், பொருளியல் கூறுகளுடன் உட்கலந்து நுண் தகர்ப்பு செய்து எள்ளுகிறார், கூடவே சுய எள்ளலும் நட்புடன் தொடர்கிறது. லிரிக் வடிவத்தில், மரபையும் விட்டுவிடாமல் அதற்காக மரபுவழியில் மட்டுமே பண்டிதத்தனமாக ஒழுகாமல் மரபை அனுசரித்தும், எதிர்த்தும், எள்ளியும் ஒரு புதுவகை விமர்சனக் கவிதை மாதிரியை நமக்கு அளித்துள்ளார் நோயல்.]

I

"மண்டைக்குள்ளே பற்றிய பொறியைப்
பரபர வென்று எரித்துப் பரப்புவோம்"

கேளீர்! கேளீர்! வீரவசனங்கள்!
வாரீர்!வாரீர்! வடவையை எழுப்புவீர்!

உலகம் எங்கிலும் உள்ள பெண்களே!
(பதினாறு எட்டும் மதாங்கினியர் தொட்டு
அறுபது தாண்டிய மந்தாகினியர் உட்பட
நுண்மான் நுழை'புழை சமத்துவம் உண்டு)
ஒன்று சேருங்கள் புணர்ச்சிப் புரட்சிக்கு!

'புலிங்கம்' எனப்படும் தீப்பொறி மூட்டி
'உற்கம் எனப்படும் தீத்திரள் தூண்டிக்
கொழுந்து விட்டெரியும் சுவாலைக்ள் செறித்துச்
சிகாவர்க்கங்கள் ஆக்கி எழுநா உயர்த்தித்
தீவகை எல்லாம் ஏகமாய்த் திரட்டி

ஊர், நகர், நாடு, தேசம், கண்டம்
அர்த்த கோள எல்லைகள் கடந்து
உலகையே அழிக்க ஊழியின் முடிவில்
பெண்பரி வடிவில் பெருங்கடலினின்றும்
எழும்பும் வடவையாய் எழும்ப வாரீர்!

ஒடுக்கப்பட்ட உடலின் விடுதலை
படுக்கை அறையில்தான் பலிக்கும் என்று
கூவி அழைக்கிறார் குட்டி ரேவதி!
தீமிக்க தீயோர் தேவியைச் சேருவீர்!
தாய்க்குலம் இனிமேல் தீக்குலம் ஆகட்டும்!
அரிவையும் தெரிவையும் எரிவை ஆகட்டும்!

II


முலைகள், யோனி, புலன் உணர் பொறிகளே
படைத்த மதன் முன் தானைத் தலைவியே!
மண்டை என்ற பகுதியும் உமக்கோ?
(இடை நிலை, விகுதியின் விசேடங்கள் அறிவேன்)
மண்டையோ மண்டை உள்ளீடோ அற்றது
முண்டம், கவந்தம், மட்டை, யூபம்,
செக்கு, புனல், ஊன் தடி, உடல் குறை எனப்
பிங்கல திவாகர, சூடாமணி நிகண்டுகள்
சங்கை இன்றிச் சாற்றி உள்ளன!
எண்சாண் உடம்புடை மனிதர்க்கே அன்றி
நுண்ணுயிர் எதற்கும் இன்றியமையாதது
சிரசே என்பதும் ஜீவராசிகளிலே
'சிரமிலி' யாவது நண்டே என்பதும்
"திறவோர் காட்சியில் தெளிந்தனம்" ஆகவே
நண்டைத் தவிர பெண்டகை உமக்கும்
சிரம் துணியுண்டதாய்த் துணிபு கொள்கிறேன்.

III


பின் நவீனத்துவ சம்சய வாதத்தின்
சிகரமாகிய சுய ஐயுறவில்
இன்னும் எனக்கு நம்பிக்கை இருப்பதால்
தலைக்குறை தங்களுக் கென்னும் என் துணிபைத்
தலைகீழாக்கி தமியெனுக்கே
தலைக்குறை உளதெனத் தர்க்கத் திற்காக
ஒத்துக் கொள்கிறேன், ஒரு கால் உமக்கும்
மண்டை இருக்கலாம், ஆனால் அதனுள்
மண்டுவதென்ன? விசால மனத்துடன்
எத்துணை விட்டுக் கொடுத்து நான் எண்ணினும்
கடபுட சடமே பதம் சிதம் சதமென
மயங்கும் உமக்கு மண்டையி நுள்ளே
பொறி பறந்திடுதல் அரிதினும் அரிதே!

IV


அப்பாவி மானிடர் அறுதிப் பெரும்பான்மைக்கு
தப்பாது இயற்கை தரும் அருங் கொடையே
பெரு, சிறு மூளைகள், முகுளம் தண்டென
வகைவகை, அமை வெளிர்சாம்பல் கூழ்மம்!
இயற்கை கொடுப்பினை ஏற்றிட இயலா
உமது மண்டை உயர்வகை ஒன்றிலே
தூய ஒருதனி சுரோணீதப் பெருக்கும்
சுக்கிலம், சுரோணீதம் கலந்த கலிலமும்
கலிங்கக் கூளிகள் காய்ச்சிய கூழ்போல்
பொங்கி வழிகின்றன மூளைக்குப் பதிலாய்!
முடிமுதல் அடிவரை முழு உடல் எங்கணும்
கடிதடம் வெடிக்க அம்மைப் புண்களாய்ச்
சபித்தவனிடத்தே சலுகை கோரி
அவலட்சணத்தை ஆயிரம் கண்களாய்
மறைத்துத் தோற்றிய மழுங்கல் இந்திரன்போல்
சுரோணிதம், கலிலம் குழம்பிய கூழ்மமே
யோகம் ஆற்றும் கலைஞனின் நெஞ்சிலும்
தியாகம் பிரியும் காதலன் நெஞ்சிலும்
முன் நிகழ்வு வின்றியும் மூளும் படைப்பியல்
பொறி என மாயப் புரட்டு முயல்கிறீர்!

சரி!சரி! சமுசய வாதத்தை இன்னும்
ஒருமுறை உமக்கே அனுகுலமாக்குவேன்.
மற்றெல் லோரையும் போலவே மண்டையில்
பெற்றீர் மூளை என்பேன் பேச்சுக்கு!
ஆயினும் ஒரு வினா: மண்டையுள் மட்ட்மே
தீயெழல் எப்படி? தேகம் முழுவதும்
பாதாதி கேசமாய்க் கேசாதி பாதமாய்
வேதி, மின், வெப்ப, எந்திரச் சக்திகள்
வட்டமாய், கிடையாய் வலமிடம் இடவலம்
கணத்தில் பாய்கையில் கபோலம் மட்டுமே
பொறியின் தொடக்கமும் தோற்றமும் ஆகுமோ?
மூளை மின் இயக்கம் அளவீடு செய்வது
எலக்ட்ரோ என்ஸெபாலோகிராம் எனக் கூறுவர்,
இதய மின் இயக்கம் அளவீடு செய்வது
எலக்ட்ரோ கார்டியோகிராம் என்று கூறுவர்;
தசை மின் இயக்கம் அளவீடு செய்வது
எலக்ட்ரோ மையோகிராம் எனக்கூறுவர்;
பார்வை மின் இயக்கம் அளவீடு செய்வது
எலக்ட்ரோ ஆக்யூலோகிராம் எனக்கூறுவர்;
முகர்வு மின் இயக்கம் அளவீடு செய்வது
எலக்ட்ரோ ஆல்பக்ட்டோகிராம் எனக்கூறுவர்.
உயிர்த்துடிப்படங்கா எந்தவோர் உடலிலும்
குருதி, நிணம், தசை, நரம்பென்னும்
மண்டலங்களிலோ மற்றும் உறுப்புகளிலோ
அணு ஒவ்வொன்றிலும் அயான் முதல் வகைவகை
சக்தி அலகுகள் சஞ்சரிக்கின்றன.
பருவம், உள நிலை, சூழல், வாழ்முறை
தற்செயல் எனக் காரணங்களைப் பொறுத்து
ஆங்காங் குடலில் சக்தியின் அளவு
ஓங்கும் ஒடுங்கும். ஆக உம் பொறியின்
தோற்றுவாய் ஒருமை வாதம் தோற்றது.

V


இதுவும் கிடக்கட்டும்! இன்னுமோர் முறையும்
உதவுவேன் உமக்கு, என்னை ஐயுற்றே!
பொறியின் தோற்றுவாய் பன்மையை ஏற்கிறேன்
பொறியின் தோற்றுவாய் ஒருமையை ஏற்கிறேன்
மண்டலம் இட்ட நாகத்தைப் போன்றே
குண்டலி சக்தி குதம் களனாகிய
மூலாதாரத்தில் மூண்டு கிடப்பதாய்க்
காலங் காலமாய்க் கழறினார் சித்தர்!
மூலக் கனலை யோக முறைகளால்
குய்யம் மேவிய சுவாதிட்டானத்தும்,
னாபியைச் சுற்றிய மணிப்பூரகத்தும்
இதயம் ஆர்ந்த அனாகத்திற்கும்
குரல்வளை சேர்ந்த விசுத்தி தன்னிலும்
படிப்படி உயர்த்திப் பக்குவப் படுத்தி
முடிவில் சகத்திர ஆரம் எனப்படும்
ஆயிரம் இதழுடை அற்புதத் தாமரைத்
தூயொளி யாக்கவும் சொன்னர் சித்தர்!

குண்டியில் குடிகொள்ளும் குண்டலிசக்தியை
மண்டைக்குச் செலுத்தும் மார்க்கத்தை மாற்றி
மண்டையில் தொடங்கிக் குண்டிக்குச் செல்லும்
குண்டக்க மண்டக்க குணவதி நீயோ?
மேல் நோக்கிய பயணத் திட்டம் தீட்டிய
பிரமிளின் மனச புத்திரி? அன்னார்
வரைவுகள் உன் நூல் அட்டையில் வார்த்து
காட்டுகின்றாய் படம்! கண்கட்டு வித்தையா?
கழித்தல் உறுப்பில் பொறிகாண் சித்தரும்
பெருக்கல் உறுப்பில் பொறிகாண் ப்ராய்டரும்
பொறியின் தோற்றுவாய் ஒருமை பேசினார்,
இருதிறம் ஆகுவர் இருமை எதிர்வில்
முன்னவர் சுட்டிய பின்புறக் கொள்கையோ
பின்னவர் சுட்டிய முன்புறக் கொள்கையோ
பொருந்தா வகையில் தம் தலைக் கொள்ளியால்
சொறிந்து கொண்ட அரியினம் போல
பொறுத்திக் கொள்கிறீர் பொறியை மண்டையில்!
பொறியின் பின்கீழ் தோற்றுவாய்க் கொள்கையும்
பொறியின் முன்கீழ் தோற்றுவாய்க் கொள்கையும்
தெளிந்தோ மருண்டோ திரிக்கும் போதிலும்
தென்னாடுடைய சிவன் நினைத்திருப்பிரேல்
நெற்றியில் பொறியின் நிலக்ண் டிருப்பீர்!
சித்தருக்கெதிராய் பொறி பிலம்பெயர்ந்தீர்!
சைவருக்கெதிராய் நுதல் தலை ஆக்கினீர்!
சித்தரின் போக்கு நந்தமிழ்த் தத்துவம்,
சிவனின் போக்கு நந்தமிழ்ச் சமயம்
நமது மண்ணின் மரபிவை, இல்லை ஏன்
உமது மண்டையில் உள்ள மண்ணோடு?
பெரும்பான்மையான பேய் பிசாசங்களைக்
கொள்ளிக்கண், கொள்ளிவாய்,
கொடும்பல் சகிதமாய்
கொழுந்து விட்டெரியும் கோர வடிவுடன்
விரித்த மரபிற்கு விலக்காய் விந்தை உம்
சிரத்தையே மாற்றினீர் தீச்செட்டியாக
பாலை பாடிய பெருங் கடுங்கோ பாடிய
பேய்மகள் இள எயினியின் உடன் பிறப்பே வாழி!

VI

வரலாறு நெடுகிலும் வளர்தீ வர்க்கங்கள்,
வரலாறு நெடுகிலும் தீவளர் வர்க்கங்கள்
எத்தனை!எத்தனை! எண்ணி மாளாது;
எண்ணி மாளாது இறந்தோர் திரள்களும்!

அழிவே போர்த்தீ ஆகவனீயமும்
சுய நல மனத்தீ காருக பத்தியமும்
உயிர், பொருள் விரயம் செய் வேதாக்கினியும்
ஆவி சுகம் தரும் விவிலியத்தீயும்
ஒடுக்கல் ஆட்சியே கொணர் புரட்சித்தீயும்
தனி நபர் சிலை நடும் பகுத்தறிவுத் தீயும்
சாதி, மதம், இனம், கருத்துரு தீயும்,
எத்தனை! எத்தனை! எல்லா தீயுமே
சுட்டெரிந்திட்டதும், சூடு போட்டதும்
மண்டையில் இம்மியும் உறைக்கவே இல்லையோ?
சூடறியாதோ சுற்றும் உன் பூ... னை?

புதுமைத் தீ என வேடம் பூணும் உன்
காமமும் தற்கணம் விசிறுதொலகாங்கையே...
வாம சாரமும் வாத்சாயனமும்
பர்த்ரூ ஹரியின் கொக்கு சாத்திரமும்
சொல்லா எதனைச் சொல்ல வந்தாயோ?
சொலி முடித்ததும் சூத்தை யானதே!
மண்டைக்குள்ளே பற்றிய பொறியைப்
பரபரவென்று 'எரித்தல்' எங்ஙணம்?
பொறியே எரியும், பொறியே எரிக்கும்,
பொறியில் எரிபொருள் இட்டும் எரிக்கலாம்,
பொறியை எரியாய் வளர்க்கலாம் என்பதை,
எரிவித்தல் எனச் சொல்வதே அன்றி
'பொறியை எரிப்பது' பொருந்தாத் தொடர், செயல்
பொறியும் ஒரு பொருள் குறிப்பதல்லவே,
புள்ளி, இலக்குமி, எந்திரம்,உறுப்பெனப்
பல்பொருள் சுட்டித் தேவைப்பட்டாத
இருண்மை கொண்டதால் இடர் விளைக்கின்றது.
தலைப்பொறிக் கொள்கையின் தத்துவ மலைவும்
பொறியை எரித்தலாம் செந்தமிழ் மலைவும்
கலிங்கத்துப் பரணியும் நள்வெண்பாவும்
பாலியல் உறவைப் போராய்ப் புனைந்த
உருவகம் கொச்சைப்படுத்திய ஒச்சமும்
வீறுரை உன்னதை, வீண் உரை ஆக்கின.
பதம், சீர், நடை, மதி கேடுகள் பரப்பும்
கவியிலா உன்கவி எடுத்துக்காட்டாய்
னுண்பகுப்பற்றி நூற்பா யாப்பில்
ஆசை பற்றியே அறைய லுற்றனென்.
ஏசினேன் என்று எரிந்தெரிந்து விழாதே!