மரபின் எச்சம்

திங்கள், 31 மார்ச் 2008 (10:25 IST)
கவிதைகள்: ச. விசயலட்சுமி

[கவிஞர் ச.விசயலட்சுமி தமிழாசிரியராக பணிபுரிந்து வருபவர். முரண்களரி அமைப்பாளர்களில் ஒருவர். "பெருவெளிப்பெண்" கவிதைத் தொகுதி இவரது முதல் தொகுதி. இந்த தொகுதியிலிருந்து சில கவிதைகளை வழங்குகிறோம்]

மரபின் எச்சம்

நீ சிரிக்கும்போது
நானும் சிரித்தேன்

நான் அழுகையில்
நீயும் அழுதாய்

அவரவராகவே
சுயமாயிருக்கிறோம்

இருள் கவியும் மாலை...
நனைக்கவரும் அலையில்
நனையாமல் காக்க
தொட்டுத் தூக்கியதும்
என் மனத்தில் முடை நாற்றம்
உடல் குறுகினேன்

மரபின் எச்சம்
இன்னும் என்னுள்

இருப்பு

உங்களுக்கு சாத்தியமாகிறது
நண்பனின் வீடு செல்வதும்
உரையாடுவதும்
நட்பையே சுற்றமாய்
வரித்துக் கொள்வதும்

இருப்பினும்
சுதந்திரக் காற்றின் போதாமை
அவ்வப்போது வெளிப்படத்தான் செய்கிறது.

எங்களை ஒப்பிட்டு
உங்களைப் பாவம் எனும் போக்கு
மிகச் சிறந்த அங்கதம்

அவ்வப்போது கேட்பதுண்டு
என்னகுறை உமக்கென?
சரிதான்.

என்றேனும்
அருகாமையிலிருக்கும்

நெருங்கிய நட்பின்
இறுதி அஞ்சலியில்
பங்கேற்காமல் போனதுண்டா?

ஒரு முறை தவிர்த்துப் பாருங்கள்
உணர்வீர்கள் எங்கள் இருப்பை

தீபாராதனை

உடல் சோர்வு
உணர்வை அழுத்த

மனசு சுத்தமாயிருந்தால்
நாளும் கிழமையுமாய்
உட்காருவியா இப்படி...!
மூலையில் முடங்கு

தீவிரமானது தீண்டாமை
வயிற்றில் முற்றிய வலி
வயிற்றுக்குத் தேவையில்லை மருத்துவம்
ஆதரவாய் ஒரு பார்வை இல்லை

தோரணமும் அபிஷேகமும்
அறுசுவை உண்டியோடு தீபாராதனை
எரிகிறது மனமும்

***


நன்றி: "பெருவெளிப்பெண்"
ஆசிரியர்: ச.விசயலட்சுமி
வெளியீடு: மித்ர ஆர்ட்ஸ்& கிரியேஷன்ஸ்

வெப்துனியாவைப் படிக்கவும்