தற்கொலைக்குத் தயாரானவன்

சனி, 15 மார்ச் 2008 (12:44 IST)
சிற்றிதழ்: நான்காம் பாதை

webdunia photoWD
["இலக்கிய முன்னணிப்படை- நான்காம் பாதை" என்ற முழக்கத்துடன் ஜனவரி 1 ,2008ல் வெளிவந்துள்ளது இந்த சிற்றிதழ். இதன் ஆசிரியர் கவிஞர்-விமர்சகர்-மொழிபெயர்ப்பாளர் பிரம்மராஜன் ஆவார். இவரது இயற்பெயர் ராஜாராம். தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் "மீட்சி" என்ற பத்திரிக்கை மூலம் தமிழில் அரிய பல கோட்பாடுகளையும், உலகக் கவிதைகளையும், உலக சிந்தனைகளையும் மொழி பெயர்ப்புகள் மூலம் தமிழ் அறிவியக்கத்திற்குள் கொண்டு வந்து நவீனத்துவ இலக்கிய இயக்கத்திற்கு செழுமை சேர்ப்பித்தார் பிரம்மராஜன். மீட்சியின் மூலம் புதிய எழுத்தாளர்கள் பலரும் அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படைப்பிலக்கியத்தில் சோதனை முயற்சிகளுக்கு ஊக்கம் அளித்த சிற்றிதழ்களில் மீட்சியும் ஒன்று. எல்லா சிற்றிதழ்களுக்கும் நடக்கும் அதே துரதிர்ஷ்டம் மீட்சிக்கும் நடந்தது. திடீரென நின்று போனது. அதன் பிறகு பல்வேறு பத்திரிக்கைகளில் எழுதி வந்த பிரம்மராஜன் தற்போது நான்காம் பாதை என்ற இந்த சிற்றிதழை துவங்கியுள்ளார். மீட்சியை விடவும் சிறப்பாக நடத்த வேண்டும் என்ற கனவுடன் "நான்காம் பாதை" துவங்கப்பட்டுள்ளது.

சிற்றேடுகளின் இடத்தை நடுப்பத்திரிக்கைகள் ஆக்ரமித்துக் கொண்டுள்ளதை கடுமையாக விமர்சிக்கும் இவர் "இலக்கிய முன்னணிப் படைக்கும் சிற்றேடுகளுக்கும் மட்டுமே உறவு உண்டு" என்று அடித்துக் கூறுகிறார். இந்த இதழிலிருந்து ராஜி பத்மனாபன் அவர்கள் எழுதிய ஓரிரு கவிதைகளை இணைய வாசகர்களுக்கு அளிக்கிறோம்]

தற்கொலைக்குத் தயாரானவன்

தற்கொலைக்குத் தயாரானவன்
பித்து நிலையில்
என்னென்னவோ செய்கிறான்

அவன் கையில்
குடும்பப் புகைப்படமொன்று கிடைக்கிறது
அதிலிருந்து தன்னுருவை
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்கத் துவங்குகிறான்

எவ்வளவு நுட்பமாக செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல் நுனி
கூடவே வருவேனென்கிறது.

அழுக்கின் சுயம்

ஒவ்வொரு மூலையிலும்
வீடு இறைந்து கிடக்கிறது
துணிக்குவியலாய்.

ஒவ்வொரு துணியிலும்
அவரவருக்கான
பிரத்யேக வாசனை
ஒட்டிக் கொண்டிருக்கிறது.

எடுக்க எடுக்க
மலைக்காமல் வளர்கிறது
துணிகளின் மலை

மடித்து
மடித்து
களைத்துப் போய்
ஒவ்வொரு குவியலிலும்
அழுக்காய்ப் படர்த்துகிறேன்
என் சோம்பலின்
சுய ரூபத்தை

மணங்களின் கலவையினூடே
முகரவியலா நறுமணத்துடன்
உயர்ந்து வளர்கிறது
என் சுயத்தின்
விஸ்வரூபம்