இன்றைய உலகம் காதலில் விடிந்திருக்கிறது! அதிகாலைப் பேருந்துநிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த பெண் தன் காதலனுடன் அந்தப் பிச்சைக்காரருக்கு உதவுகிறாள்!
FILE
பறவைகள் பறக்கின்றன இணையிணையாய்!
அடுத்த ஆண்டுக்குள் யாரையாவது காதலித்துவிட முடிவெடுத்து வேகமாகக் குப்பைகளைத் தள்ளுகிறாள் முதிர்க்கன்னி!
உள்ளம் குதூகலித்துத் துள்ளுகிறது! இசையின் நறுமணம் பரவி விரிகிறது! புலரா அந்தப் பொழுதின் குறைந்த ஒளி பனியில் நனைந்த பூவின் கணத்தைப்போல் மனதிற்குள் மகிழ்ச்சியின் எடையைக் கூட்டுகிறது!
மனைவியின் தோள்மீது கைப்போட்டுக்கொண்டு பேருந்தில் ஏறுகிறான் காதற்கணவன் எங்கும் வியாபித்திருக்கிறது காதல்!
என் விசைப்பலகையின் எழுத்துக்களை இன்று யாரோ சிவந்த ரோஜாக்களாக மாற்றியிருக்கிறார்கள்! சொல்ல முடியாத அலைகள்வந்து மோதிச்செல்லும் கரையாய் ஜனித்திருக்கிறேன் நான்!
காதல் கலவியை மட்டுமல்ல கலப்பையும் உண்டாக்கும் மரணத்தின் கடைசிச் சொட்டிலும் ததும்பும் காதலுடன்!
காதலைக் காதலாய்ப் பார்க்கும் காதலர்களால் நிறைந்திருக்க வேண்டும் இந்த உலகம்!