காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்களை, அமெரிக்காவில் நாளை ஏலம் விடுவதற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருக்கிறது.
இந்திய சுதந்திரத்துக்காக அற வழியில் போராடிய மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, பாக்கெட் கெடிகாரம், தட்டு, குவளை, செருப்பு ஆகியவை அமெரிக்காவில் உள்ள ஜேம்ஸ் ஓடிஸ் என்பவரிடம் இருக்கிறது. அவர் அவற்றை, ஒரு நிறுவனத்தின் மூலம் நாளை (5-ந் தேதி) ஏலம் விடப்போவதாக அறிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் காந்தி பயன்படுத்திய பொருட்களை ஏலம் விடக்கூடாது என்று கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, அகமதாபாத்தில் உள்ள நவஜீவன் அறக்கட்டளை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் அகமதாபாத்தில் செயல்படும் நவஜீவன் அறக்கட்டளை, காந்தியடிகள் கடந்த 1929-ம் ஆண்டு தொடங்கியது ஆகும். அந்த அறக்கட்டளை சார்பில் இந்த வழக்கை தொடர்கிறோம்.
1996-ம் ஆண்டு, காந்தி பயன்படுத்திய சில பொருட்கள் இங்கிலாந்து நாட்டில் ஏலம் விடப்பட இருந்தது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி, அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், தடை உத்தரவு வழங்கப்பட்டது.
அது போல, நியூயார்க் நகரில் மார்ச் 5-ந் தேதி காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்களின் ஏலம் நடக்க இருக்கிறது. இந்த ஏலத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
அமெரிக்காவில் தற்போது இருக்கும் காந்தியின் பொருட்கள், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டவை ஆகும். காந்தி பயன் படுத்திய பொருட்கள், அரும் பெரும் பொக்கிஷம். அவை இந்தியாவுக்கு சொந்தம். எனவே ஏலத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி அனில் குமார், அமெரிக்காவில் நாளை நடக்க இருக்கும் ஏலத்துக்கு இடைக்கால தடை விதித்தார்.
இதற்கிடையில், காந்தி பயன்படுத்திய பொருட்களை வைத்திருக்கும் ஜேம்ஸ் ஓடிஸ் கூறிய கருத்துக்கள் அந்நாட்டு பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ளது.
அதில், காந்தி பயன்படுத்திய 5 பொருட்களை ஏலம் விட வைத்து இருக்கிறேன். அவற்றுடன், டெல்லி இர்வின் ஆஸ்பத்திரியில் கொடுக்கப்பட்ட காந்தியின் ரத்த பரிசோதனையின் அறிக்கை மற்றும் அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு, காந்தி கையெழுத்திட்டு அனுப்பிய தந்தி ஆகியவற்றையும் இணைத்து இருக்கிறேன்.
அனைத்து பொருட்களையும் இந்தியாவுக்கு இலவசமாக கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் இந்தியா தனது வளர்ச்சிக்காக ஒதுக்கும் ஒட்டு மொத்த தொகையில், 5 சதவீதத்தை ஏழைகளுக்காக ஒதுக்க வேண்டும். அல்லது ஏழைகளுக்காக மிகப்பெரிய நலத்திட்டத்தை, இந்தியா அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம்.
இதற்கிடையில், அமெரிக்காவில் உள்ள பிரபல ஓட்டல் அதிபர் சந்த் சிங் சத்வால், இந்த பொருட்களை ஏலத்தில் எடுத்து இந்தியாவிடம் வழங்க தயார் என்று அறிவித்து இருக்கிறார்.