இனக்கொடுமை: இந்தியருக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவு!

புதன், 13 பிப்ரவரி 2008 (19:32 IST)
இந்திய‌த் தொழிலாளர்களை இனவேறுபாடுடன் நடத்தியதற்காக முன்னணி கார் தயாரிப்பநிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் (64 ஆயிரம் பவுண்டு) அபராதம் விதித்து பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

குஜராத்தை சேர்ந்த கல்மேஷ் ஷா (30), 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரிட்டனில் உள்ள ஹோண்டா நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு இரண்டு ஆண்டுகள் பணிபு‌ரிந்த நிலையில், திடீரென்று எந்த பயிற்சியும் அளிக்கப்படாமல் தயாரிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு கழிப்பிடத்துக்கு செல்லக்கூட மேற்பார்வையாளர் அனுமதி வழங்காமல் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால், ஷா உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டு வேலையில் இருந்து விலகினார்.

இதுகுறித்து ஷா பிரிட்டன் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிவில் ஹோண்டா நிறுவனம் ஷாவுக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

"இன அடிப்படையில் என்னை மூன்றாவது பிரிவு குடிமகன் போல நிறுவனம் நடத்தியதால் தான் வழக்கு தொடர்ந்தேன், பணத்திற்காக அல்ல" என்று ஷா கூ‌றினார்.

ஹோண்டா நிறுவன‌ச் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'நீதிமன்ற‌த் தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம். ஷாவுக்கு நடத்த கொடுமை‌க்காக நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்