மலேசியாவில் 3 ஆண்டு காலம் தங்கி வேலை செய்வதற்கு பணியாற்ற அனுமதி (ஒர்க் பர்மிட்) பெற்ற 50 தமிழர்கள், அந்த நாட்டில் ஜோகோர்பாகு என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தனர்.
அவர்கள் 2005-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு ஜுலை மாதம் வரை அந்த தொழிற்சாலையில் வேலை செய்தனர். 7 மாதங்களுக்கு முன்பு அவர்களின் பணியாற்ற அனுமதி காலாவதியானது. 3 ஆண்டு ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததும், அவர்களை தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். ஆனால் அவர்களை டிசம்பர் வரை தொடர்ந்து வேலை செய்யும்படி ஏஜெண்டுகள் கேட்டுக்கொண்டனர். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கடைசி 7 மாதங்களுக்கான சம்பளம் 6 லட்சம் ரூபாயும் கொடுக்கப்படவில்லை. பணியாற்ற அனுமதியையும் நீட்டிக்கவில்லை.
இதுபற்றி புகார் செய்வதற்காக அவர்கள் இந்திய தூதரகத்துக்கு பேருந்தில் சென்றபோது, அவர்கள் சென்ற பேருந்தை குடியேற்ற அதிகாரிகள் வழிமறித்து அவர்களை கைது செய்தனர்.
சிறையில் உள்ள அதிகாரிகள் அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க விமானக் கட்டணத்துக்கான பணத்தை கொடுக்கும்படி கேட்டனர். 7 மாதமாக சம்பளம் இல்லாமல் இருக்கும் அவர்களிடம் வங்கி கணக்கு புத்தகத்தை கொடுக்கும்படியும் அதிகாரிகள் வற்புறுத்தினார்கள்.
இதுபற்றி அவர்கள் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவர் ராஜசேகரிடம் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் வேலை வாங்கிக்கொடுத்த தரகர்கள் மீது ஒருவாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படி செய்யாவிட்டால் லஞ்ச ஊழல் தடுப்பு காவல்துறையில் புகார் செய்வோம் என்றும் குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கு தாக்கீது அனுப்பி இருக்கிறார்.