மதுவின் பிடியில் தமிழக இளைஞர்கள் : எங்கே செல்கிறது இந்த சமூகம்?

சனி, 13 ஜூன் 2015 (13:37 IST)
தமிழகத்தில் நடுத்தர வயதுடைய பலர் மதுவுக்கு அடிமையாகி தவித்து வருகிறார்கள் என்றால், அவர்களை காட்டிலும், இளைஞர்களும், சிறுவர்களும் மது போதைக்கு அடிமையாகி, தங்களது பெற்றோர்களையும், இந்த சமுதாயத்தையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளனர்.
தமிழகத்தில் இலைமறைவு காயாக இருந்த வந்த மதுப்பழக்கம் இன்று இளைஞர்கள் பலரையும் தனது கோரப்பிடியில் சிக்கவைத்துள்ளது.
 
முன்பு எல்லாம், காதல் தோல்வி போன்ற சில நேரங்களில் மட்டுமே, மதுவை நாடி சிலர்  சென்றனர். ஆனால், இன்றோ காதல் தோல்வி முதல், தேர்வில் தோல்வி, குடும்பப் பிரச்சனை என சகல பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக மதுவை நாடிச் செல்லும் அவலம் அதிகரித்து வருகிறது.
 
இன்னும் ஒருபடி மேலே சென்று சிலர், காலையில் எழுந்த உடன் டீ, காபி போன்றவைகளை சாப்பிடுவதற்கு பதில் மதுவை அருந்தும் மாபெரும் பாதகமும் நடைபெறுகிறது.
 
இவை எல்லாவற்றையும் விட, இந்த மதுப்பழக்கம் மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை. இது தான் தமிழகத்தின் மிகப் பெரிய சாபக்கேடாக கருதப்படுகிறது.

மாணவர்கள் மது அருந்துவதன் மூலம் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், உடல் நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.
 
உதாரணத்திற்கு, கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தொழில் நகரில் (திருப்பூரில்) பள்ளி மாணவர்கள் சிலர், பள்ளி அருகே உள்ள டீக்கடை, சாலைகள், பேருந்து நிலையம் போன்ற இடங்களில், கும்பலாக நின்று  புகைபிடிப்பதும், மது அருந்துவதையும் நேரடியாகவே காணும் போது நெஞ்சே வெடிக்கும் போல் உள்ளது. 
 
மேலும், பிறந்த நாள், வீட்டு விசேஷங்களுக்கு செல்லும் நண்பர்கள் கும்பலாக சேர்ந்து கொண்டு, ட்ரீட் என்ற பெயரில், மது அருந்தும் நிகழ்வும் இந்த நிமிடம் வரை நடைபெற்றுக் கொண்டு தான் உள்ளது. இது போன்ற தவறான பழக்கமுள்ள மாணவர்களுடன், சேரும் நல்ல மாணவர்களும், பாதிக்கப்படுகின்றனர் என்பது தான் வேதனையான தகவல்.
 
அதே போல, தமிழகத்தின் மத்திய மாவட்டமான (கரூர்) ஒரு பேருந்து நிலையத்தில், கடந்த மே மாதம் 27ஆம் தேதி அன்று பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் மாணவர்கள் சிலர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். 
 
மது போதை தலைக்கு ஏறிய நிலையில், தங்களது ஊருக்கு செல்ல பேருந்து நிலையத்துக்குள் செல்ல முயன்றார். ஆனால், சாலையைக் கடந்து பேருந்து நிலையத்துக்குள் செல்லும் முன்பே, பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் மயங்கி கீழே சரிந்துவிட்டனர்.
 
பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் மாணவர் போதையில் மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், அந்த  மாணவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர். ஆனால், அவர்களால் எழ முடியவில்லை.
 
இது குறித்து, மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்த பின்புதான், மாணவர்களின் பெற்றோர்கள் அலறித்துடித்து அங்கு வந்து கண்ணீரோடு அந்த மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
 
இது போன்ற சம்வங்கள் நாளிதழ்கள், வார இதழ்கள், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியானதையடுத்து, பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இது குறித்து சமுக சேவர்கள் சிலரிடம் பேசிய போது,
 
முன்பு எல்லாம் திரையங்கம், திருவிழா, ரேஷன் கடை போன்றவற்றில்தான் கும்பல்களை பார்க்க முடியும். ஆனால் இப்போது எல்லாம் அங்கு எல்லாம் கும்பல் இல்லை, மாறாக மதுக்கடைகளில் தான் கும்பல் அலைமோதுகிறது.
 
அதுவும் படிக்கும் மாணவர்கள் மது அருந்தும் நிகழ்வு தமிழகத்தை தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள்தான் இந்த நாட்டின்  எதிர்கால தூண்கள் எனவே அவர்கள் ஒழுக்கம், நற்பண்பு மற்றும் நல்ல நடத்தையே பிரதானமாக கொள்ள வேண்டும். ஆனால் புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பாக்கு போன்றவற்றை பெற்றோர்களுக்கு தெரியாமல் உட்கொண்டு அதில் சிக்கி மீளமுடியாமல் இருப்பது வேதனையாக உள்ளது. இதனால் அவர்களது உடல் நலன் கெடுகிறது, நீண்ட ஆயுளும் குறைகிறது. எனவே, மது அருந்தும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு, அரசே முன்வந்து கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.
 
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களாக இருப்பதால், பிள்ளைகள் மீது அதிக அளவில் கவனம் செலுத்தமுடிவதில்லை. இதை மாணவர்கள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி தெரிந்தோ தெரியாமலோ இது போன்ற தவறுகளை செய்கின்றனர். 
 
எனவே, இனி வரும் காலத்தில் பெற்றோர்கள் உஷாராக இருந்து தீய பழக்க வழக்கங்களில் இருந்து தங்களது பிள்ளைகளை தடுக்க வேண்டும். நல்ல பழக்கவழங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.  
 
அது போலவே, குடி குடியை கெடுக்கும், மது வீட்டிற்கும், நாட்டிற்கும், உயிருக்கும் கேடு என மது பாட்டில்களில் அரசு வெளியிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், இளைஞர்கள், மாணவர்கள் எதிர்கால நலன் கருதி, ஆக்கபூர்வமான நடவடிக்கையில்  ஈடுபட வேண்டும் என்கின்றனர்.
 
இனி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் அரசின் கைகளில்தான் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்