துர்க்கை வழிபாடு அனைத்து செல்வங்களையும் அள்ளி தரும்!!!
தேவியானவள் முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் தருகிறாள்.
இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை, அதாவது, வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து, நம்மை முழு மனிதனாக ஆக்குகிறாள்.
மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி, நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள்.
பத்தாவது நாள் தசமியன்று, மோட்சத்தை அடைய வழி ஏற்பட்டதைக் கொண்டாடும் தினமான நவராத்திரி பூஜையை எல்லோரும் சேர்ந்து வழிபடுகின்றார்கள். இந்தியாவில் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களில் தசரா என்றும், நவராத்திரி என்றும் கொண்டாடினாலும் நாம் செய்யும் பூஜைகள் ஆராதனைகள் அனைத்தும் அன்னை பராசக்தியின் அருள்வேண்டி கொலு வைத்து பூஜைகள் நடத்தி வழிபடுகின்றனர்.
ஒன்பது நாட்கள் செய்ய வேண்டிய நெய்வேத்தியங்கள்:
முதல்நாள் நெய்வேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.
இரண்டாம் நாள் நெய்வேத்தியம்: தயிர்ச்சாதம்.
மூன்றாம் நாள் நெய்வேத்தியம்: வெண்பொங்கல்.
நான்காம் நாள் நெய்வேத்தியம்: எலுமிச்சை சாதம்.
ஐந்தாம் நாள் நெய்வேத்தியம்: புளியோதரை.
ஆறாம் நாள் நெய்வேத்தியம்: தேங்காய்ச்சாதம்.
ஏழாம் நாள் நெய்வேத்தியம்: கற்கண்டுச் சாதம்.
எட்டாம் நாள் நெய்வேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.
ஒன்பதாம் நாள் நெய்வேத்தியம்: அக்கர வடசல், சுண்டல்
நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும். விஜயதசமி அன்று புதுவேலை, கல்வி, பாட்டு போன்றவற்றை தொடங்குதல் நல்லது. நவராத்திரி சமயத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கொடுத்தால் பன்மடங்கு செல்வம் பெருகும்.
நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் அம்பிகையை பூஜிக்க வேண்டும். அதிலும் முக்கியமாக அஷ்டமியன்று கட்டாயம் வழிபட வேண்டும். "துர்காஷ்டமி' என்றே அந்நாளுக்கு பெயர். இந்நாளில் துர்க்கையை வழிபட்டால் அனைத்து பலன்களையும் பெறலாம். மேலும் ஒன்பது நாள்களிலும் தேவி ஒன்பது வடிவங்களில் காட்சியளிக்கிறாள். குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்ரா என்னும் ஒன்பது வடிவங்களில் தேவி காட்சி தந்து அருள்புரிகிறாள்.