ஆயுர்வேதத்தில், நீலி எனப்படுகிறது. ஆவாரம் செடிகளின் இலைகளைப் போன்றிருக்கும். நமது நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகும் மூலிகை வகைகளில், அவுரிக்கு பெரும் பங்கு இருக்கிறது. இச்செடியினின்றும் நீலம் எடுக்கப்பட்டு மேல்நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
அவுரி, சிறுசெடி வகையை சார்ந்தது, பயிரிடப்படுபவை, புதர் செடிகள் போல அடர்த்தியாக வளர்ந்திருக்கும். இலைகள் ஆழ்ந்த பச்சை நிறமானவை. அவுரி வேர் பட்டையை, கைபிடியளவு எடுத்து, பத்து மிளகு சேர்த்து நான்கு டம்ளர் நீரை, ஒரு டம்ளராக காய்ச்சி, தினம் இரு வேளை பருகி வர, காணாக்கடி, ஒவ்வாமை, தோல் நோய்கள் ஆகியவை தீரும்.
இலையை அரைத்து, கொட்டைப்பாக்கு அளவு வெள்ளாட்டுப் பாலில் கலந்து அருந்த கல்லீரல் நோய்கள் தீரும். தினம் ஒரு வேளையாக, மூன்று நாட்கள் அருந்த வேண்டும். இதன் இலையை அரைத்து, தோல் நோய்கள் சிரங்குகளுக்கு பூச குணமாகும்.
இலையை அரைத்து, விளக்கெண்ணெயுடன் கலந்து, சிறு குழந்தைகளின் தொப்புளை சுற்றி தடவ, மலக்கட்டு நீங்கும். அவுரி வேரை நன்றாக அரைத்து, நெல்லிக்காய் அளவு அரை ஆழாக்கு பசுவின் பாலில் கலக்கி, வடிகட்டி, தினம் ஒரு வேளை என, எட்டு நாள் தர, சிலந்தி, எலி முதலியவையின் விஷம் நீங்கும்.