முடி கொட்டுவது தடுத்து வளர கவனத்தில் கொள்ள வேண்டியவை!

தலைக்கு பாதுகாப்பாக இருக்கும் தலைமுடியின் வேர்கள் தலையின் உட்புறத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. ஒவ்வொரு தலைமுடியும் க்யூடிகிள், கோர்டெக்ஸ், மெடுல்லா என்ற மூன்று அடுக்குகளைக் கொண்டது. க்யூடிகிள் என்பது தலைமுடியின் மேல்பகுதியில் முடியின் பாதுகாப்புக்கு முக்கிய காரணமாக விளங்குவது. இந்தப் பகுதி சரியாகப் பாதுகாக்கப்  பட்டால்தான் முடி பளபளப்பாகவும் அழகாகவும் இருக்கும்.

 
கோர்டெக்ஸ், க்யூடிகிளுக்கு அடியில் அமைந்துள்ள நார் போன்ற செல்தான் முடியின் வலிமைக்கு உதவுகிறது. இதிலுள்ள மெலனின் என்ற சத்து முடிக்கு இயற்கையான வண்ணம் தருகிறது.
 
மெடுல்லா என்பது முடியின் நடுவில் மென்மையான கேரடின் செல்லை உள்ளடக்கிய பாகம். இதுதான் க்யூடிகிள் மற்றும்  கோர்டெக்ஸிற்கு சத்துக்களை எடுத்துச் செல்லும் பாகம். இதனாலேயே நோய்வாய்ப்படும்போது முடி அதிகமாகக் கொட்டுகிறது.
 
தலைமுடி நேராகவும், சுருள் சுருளாகவும், மெல்லியதாகவும் அவரவர் உடலின் தன்மைக்கேற்ப வளரும். முடிக்கு வண்ணம்  தரும் மெலனின் அளவு 40 வயதிற்கு மேல் குறைவதால், முடி நரைக்க ஆரம்பிக்கிறது. ஆன், பெண் உடலில் உள்ள  ஹார்மோன்களின் அளவைப் பொருத்தும் முடி வளர்ச்சி வேறுபடும். 
 
கர்ப்பமாக இருக்கும் பெண்களின் உடலில் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும்போது தலைமுடியும் வேகமாக வளரும். குழந்தை பிறந்தபின் உடலின் ஹார்மோன்கள் குறைவதால் அதிக அளவில் முடி கொட்டுகிறது. நம் உடல் ஆரோக்கியம், முடியின்  ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கும்.
 
மற்ற உறுப்புகளைப் போன்று தலைமுடியையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் ஆகும். தலையை மென்மையான சீப்பினால் வாரவேண்டும். கடின பற்களை உடைய சீப்பினால் அழுந்த வாரினால் முடி கொட்டும். 
 
தலைமுடியை முடியின் வாகிற்கேற்றபடியே வாரவேண்டும். தலையின் பின்பக்கமிருந்தோ, பக்கங்களிலிருந்தோ வாரினால்  க்யூடிகிள் பாதிக்கப்பட்டு முடி சிக்காகி, வறண்டு அழகு இழந்துவிடும்.
 
ஈரத்தலையை கண்டிப்பாக வாரக்கூடாது. முடியின் வலிமைக்கு காரணமான ஹைட்ரஜன் பகுதி பாதிக்கப்பட்டு முடி வலுவிழந்து கொட்டி விடும். நைலான் பிரஷ் சீப்புகளை வார பயன்படுத்துதல் கூடாது. 
 
வட்டமான முனையுள்ள பற்களைக் கொண்ட சீப்பினால் வார வேண்டும். அடிக்கடி சீப்புகளை கழுவ வேண்டும். மற்றவர்  உபயோகித்த சீப்புகளை பயன்படுத்தக் கூடாது.

வெப்துனியாவைப் படிக்கவும்