மருத்துவ குணங்கள் நிறைந்த நோய் தீர்க்கும் ஏலக்காய்....!
நறுஞ்சுவையும் நறுமணமும் உள்ள மருந்துப்பொருள் ஏலக்காய். ஏலக்காய் கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. சிறுநீரைப் பெருக்கும். தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, வறட்சி, கபம் முதலியவற்றைக் கட்டுப் படுத்தும்.
நாம் குறைந்தபட்சம் தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்தால் கூட நல்ல சுறுசுறுப்பைப் பெற முடியும். அதோடு ஜீரணக்கோளாறு இல்லாமல் ஆரோக்கியமான உடலையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.
பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.
ஏலக்காய் விந்துவைப் பெருக்கும்; காமத்தைத் தூண்டும். வயிற்று உப்புசத்தை நீக்கி செரிமானத்தை எளிதாக்குகின்றது.
பாலில் சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து அருந்தி வந்தால் இருபாலருக்கும் குறைபாடுகள் குணமாகும். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளையே பயன்படுத்தினால் போதும்.
ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.சில சமயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்பவர்களுக்கு நெஞ்செரிச்சலும் வாய்வுத் தொந்தரவும் இருக்கும். இவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு ஏலக்காய் மெல்லுவது நல்லது.
இரண்டு ஏலக்காயில் உள்ள விதைகளை இடித்து கிராம்புகள் மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் கலந்து விழுங்கினாலும் உடல் ஜீரணமாகும். இதே போல ஏலக்காயை ‘சூயிங்கம்’மிற்கு பதிலாக மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும்.
ஏலக்காய், சீரகம், சுக்கு, கிராம்பு சம அளவாகப் பொடித்து, 2 கிராம் தேனில் தினமும் 3 வேளைகள் சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.
நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும். சிலர் வாயிலிருந்து நாற்றம் வீசும். அருகில் இருந்து பேசமுடியாதபடி வாய் நாற்றம் அதிகமாக இருக்கும். இவர்களும் ஏலக்காய் மென்று சாப்பிடலாம்.