10 தூதுவளை இலைகளை எடுக்கவும். இதனுடன், சிறிது முசுமுசுக்கை இலை, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சளி, இருமல் இல்லாமல் போகும்.
சளி பிரச்சினைக்கு தூதுவளை மருந்தாகிறது. இது, உஷ்ணத்தை கொடுக்க கூடியது. உடலுக்கு பலத்தை தருகிறது. முசுமுசுக்கை சளியை போக்குகிறது. ஆயுளை அதிகரிக்கும் தன்மை கொண்டது. தூதுவளை, முசுமுசுக்கை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
வெள்ளெருக்கம் பூவை பயன்படுத்தி ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து தயாரிக்கலாம். வெள்ளெருக்கம் பூவின் இதழ்களை நீர்விடாமல் பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் மிளகுப்பொடி சேர்க்கவும். 4 பங்கு பூவுக்கு ஒரு பங்கு மிளகு என்ற அளவில் எடுக்கவும். இதை நன்றாக கலந்து சுண்டைக்காய் அளவில் உருண்டைகளாக பிடிக்கவும். இது காய்ந்தவுடன் மிளகு அளவுக்கு கிடைக்கும். அன்றாடம் இருவேளை மிளகு அளவுக்கு சாப்பிடும்போது ஆஸ்மா சரியாகும். ஆஸ்துமாவுக்கு மிகவும் பாதுகாப்பான மருந்தாக வெள்ளெருக்கம் பூ விளங்குகிறது. ஒரு வெள்ளெருக்கம் பூவுடன் 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் ஆஸ்துமா பிரச்சினை தீரும்.
கடுகை பயன்படுத்தி வறட்டு இருமலுக்கான தேநீர் தயாரிக்கலாம். கால் ஸ்பூன் கடுகு எடுத்து லேசாக வறுக்கவும். இதை இடித்து எடுக்கவும். இந்த பொடியில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி தேன் சேர்த்து குடிப்பதால் சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி, கண்களில் நீர் வழிதல் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் போகும். இந்த தேநீரை 50 முதல் 100 மில்லி வரை குடிக்கலாம்.