கொத்தமல்லி விதையின் மருத்துவ குணங்களும் பயன்களும்...!!

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகாமல் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றில் உள்ள அபான வாயு சீற்றமாகி மேல் நோக்கி எழும்பி தலைவலியை  உண்டாக்கு கிறது. சில சமயங்களில் கீழ்நோக்கி சென்று மூலப்பகுதியைத் தாக்கி புண்களை ஏற்படுத்துகிறது. 

ஜீரண சக்தி நன்றாக இருந்தால்தான் மலச்சிக்கல், வயிறு மந்தம் போன்றவை ஏற்படாது. நாம் எத்தகைய கடினமான அதாவது எளிதில் சீரணமாகாத உணவுகளை  சாப்பிட்டாலும் அதனுடன் மல்லி விதை பொடியையும் சேர்த்துக்கொண்டால் உணவு எளிதில் ஜீரணமாகும்.
 
பல் இடுக்குகளில் உள்ள கிருமிகளாலும், குடல் அல்லது வயிற்றுப் புண்களாலும் சிலருக்கு வாய் துர்நாற்றம் வீசும். இவர்கள் மல்லி விதையை வாயில் வைத்து மெதுவாக மென்று உமிழ்நீரை இறக்கினால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
 
இதயம் பலப்பட அடிக்கடி உணவில் மல்லியைச் சேர்த்துக்கொள்வது அவசியம். புளித்த ஏப்பத்தை போக்க தனியாவுடன் சிறிது சோம்பு சேர்த்து வாயில் போட்டு மென்று சாறு இறக்கினால் சில நிமிடங்களில் நிவாரணம் கிடைக்கும்.
 
பித்தத் தலைவலி உள்ளவர்கள் சந்தனத்துடன் மல்லியை அரைத்து பற்றுபோட்டால் பித்தம் தணிந்து தலைவலி குணமாகும். ஜலதோஷம் பிடித்திருந்தாலும் சிலருக்கு தலைவலி உண்டாகும். இவர்கள் மல்லி விதையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் கபால சூலைநீர் நீங்கி தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.
 
கொத்தமல்லி விதை, சந்தனம், நெல்லி வற்றல் இவற்றை நீரில் நன்றாக ஊறவைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலைச்சுற்றல், கிறுகிறுப்பு குறையும்.
 
சுக்கு மல்லி இவற்றை சம அளவு எடுத்து இடித்து வைத்துக் கொண்டு, ஒரு கப் தண்ணீரில் 1 ஸ்பூன் பொடியைப் போட்டு கஷாயம் போல் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து மாலை வேளையில் அருந்தி வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்