வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகிறது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.
வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டை பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு எரிச்சல் போன்றவையும் தணியும்.
வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியது. இதில் உள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்கி, ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பைக் குறைக்கிறது.
ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கவும் வெண்டைக்காய் உதவுகிறது. அடிக்கடி வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி, இருமல் வருவதும் தவிர்க்கப்படுகிறது.