தெலுங்குதேசம் - பாரதீய ஜனதா கூட்டணி உறுதி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திங்கள், 7 ஏப்ரல் 2014 (11:26 IST)
ஆந்திராவில் நீண்ட இழுபறிக்கு பின்னர் தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி உறுதியானது. இதை இரு கட்சி தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர்.
Chandrababu Naidu & Narendra Modi
ஆந்திராவில் வரும் 30 ஆம் தேதி, அடுத்த மாதம் 7 ஆம் தேதி என பாராளுமன்ற தேர்தலும், சட்டசபை தேர்தலும் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
 
இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவும், தெலுங்குதேசம் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு 15 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நிலைமை நீடித்து வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகாலிதளம் கட்சியை சேர்ந்த நரேஷ் குஜ்ரால் எம்.பி., மத்தியஸ்தராக செயல்பட்டார்.
 
இந்நிலையில், இறுதியில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இதை ஹைதராபாத்தில் நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு, பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
 
இரு தரப்பிலும் ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி, சீமாந்திராவில் 5 பாராளுமன்ற தொகுதிகளிலும், 15 சட்டசபை தொகுதிகளிலும் பாரதீய ஜனதா போட்டியிடும். இதேபோன்று தெலுங்கானாவில் அந்தக் கட்சிக்கு 8 பாராளுமன்ற தொகுதிகளும், 47 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
 
சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், 

“இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. தொகுதி ஒதுக்கீடு இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும். இரு கட்சிகளும் கூட்டணி அமைத்திருப்பது அதிர்ஷ்டம். இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும்” என கூறினார்.
 
மேலும் அவர், “மோடி, நாட்டின் வளர்ச்சியை குறியாக கொண்டு செயல்படும் தலைவர். மதம், பிராந்தியம், வகுப்பு போன்றவற்றுக்கு அப்பால் மோடிக்கு ஆதரவு பெருகி வருகிறது. நமது நோக்கம், காங்கிரஸ் இல்லாத இந்தியா, ஊழல் இல்லாத இந்தியா” என கூறினார்.
 
குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு 2000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா கூட்டணியிலிருந்து விலகிய தெலுங்குதேசம், இப்போது 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கூட்டணியில் ஐக்கியம் ஆகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இரு கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீட்டிலிருந்து வந்த கோபங்கள் தணிந்து உடன்பாடு எட்டப்பட்டது எப்படி என்ற நிருபரின் கேள்விக்கு சந்திரபாபு நாயுடுவும், பிரகாஷ் ஜவடேகரும் கூட்டாக பதில் அளித்தனர். அப்போது அவர்கள், “நாட்டு நலனின் அடிப்படையில் கூட்டணி உருவாகியுள்ளது. நல்லெண்ண அடிப்படையில் இரு கட்சியிலும் டிக்கெட் கேட்கிறவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என கூறினர்.
 
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த சந்திரபாபு நாயுடு, “இரு கட்சிகளும் கூட்டாக பிரச்சாரம் நடத்துவோம்” என அறிவித்தார்.
 
பிரகாஷ் ஜவடேகர், நிருபர்களிடம் பேசுகையில், “இந்த கூட்டணி அறிவிப்பு வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இது சீமாந்திரா, தெலுங்கானாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தேசத்தையும் ஊக்குவிப்பதாக அமையும். பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடுவுடன் தொலைபேசியில் பேசினார். இருவரது பேச்சும் நல்ல முறையில் அமைந்தது. அருண் ஜெட்லியும், சந்திரபாபு நாயுடுவுடன் தொலைபேசியில் பேசினார். சீமாந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களும் சமாதானமாக இருக்கும். துரிதமான வளர்ச்சியை காணும்” என கூறினார். 
 
இந்த கூட்டணியை உருவாக்குவதற்கான இரு தரப்பு பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக செயல்பட்ட அகாலிதளம் கட்சி எம்.பி., நரேஷ்குஜ்ரால் நிருபர்களிடம் பேசுகையில், “நாடு ஒரு நெருக்கடியான நிலையில் இருக்கிறபோது, அதை மீட்பதற்கு சந்திரபாபு நாயுடு வந்திருக்கிறார். அவர் நரேந்திர மோடியுடன் இணைந்து ஊழலற்ற, காங்கிரஸ் இல்லாத நாட்டை கட்டமைப்பதில் உதவுவார்” என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்