ஃபேஸ்புக்கில் லைக் வாங்க எண்ணியவருக்கு போலிஸ் லாக் அப்

வெள்ளி, 20 பிப்ரவரி 2015 (17:24 IST)
ஃபேஸ்புக்கில் அதிக பேரிடம் பாராட்டை பெறுவதற்காக ஆமை மீது நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 
 
கடந்த மே மாதம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பாசல் ஷேக் (24) என்னும் வாலிபர் ஒருவர், அங்குள்ள உயிரியல் பூங்காவிற்குச் சென்றுள்ளார். அங்கு ஓரிடத்தில், மிகவும் வயதான ஆமை என்று ஒரு பெயர்ப்பலகை இடப்பட்ட இடத்திற்கு சென்றுள்ளார்.
 
அப்போது ஷேக் ஆமை இருக்கும் இடத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த கம்பி வலையைத் தாண்டி உள்ளே நுழைந்துள்ளார். பின்னர், தனது நண்பனிடம் கூறி, அந்த வயதான ஆமையின் மீது ஏறி நின்றபடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
 
அதை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். ஷேக் நினைத்ததை விட பேஸ்புக்கில் அந்தப் படம் நன்றாக பரவியதால் அதிகமாகவே லைக்குகள் கிடைத்துள்ளது. ஆனால் அவரை, காவல் துறையினர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
 
அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆறு மாதம் சிறை அல்லது 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் வாய்ப்புள்ளது. 
 
இது குறித்து கருத்து தெரிவித்த பாசல் ஷேக் “பேஸ்புக்கில் லைக் கிடைக்கும் என்பதற்காகத்தான் இப்படிச் செய்தேன். ஆனால் இதற்கு இவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டி வரும் என்று நினைத்துகூடப் பார்க்கவில்லை” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்