பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது செருப்பை வீச முயன்ற வாலிபர் கைது

திங்கள், 2 மே 2016 (19:49 IST)
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மீது, ஒரு வாலிபர் ஒருவர் செருப்பு வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பீகார் மக்களின் குறைகளை நேரிடையாக தெரிந்து கொள்வதற்காக, அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஜனதா தர்பார் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். 
 
சமீபத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஒரு வாலிபர் அவரிடம் மனுவை கொடுப்பது போல் அருகில் வந்தார். ஆனால், திடீரென தான் காலில் அணிந்திருந்த செருப்பை எடுத்து நிதிஷ்குமார் மீது வீச முயன்றார். ஆனால் அதற்குள் அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை தடுத்து மடக்கி பிடித்தனர். அதன்பின் போலீசார் அவரை கைது செய்தனர்.
 
வெயில் காரணமாக ஏற்படும் தீ விபத்துகளை தவிர்ப்பதற்காக, பீகார் மக்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சமையல் செய்வதற்கும், பூஜைகள் செய்வதற்கும் அங்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கோபமடந்த அந்த இளைஞர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


 

 
ஆனால், அந்த இளைஞர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என நிதிஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில் “மக்களின் நலனுக்காக நான் எடுக்கும் சில நடவடிக்கைகள் பிடிக்காமல் யாரேனும் என்னை துப்பாக்கியால் சுட்டாலோ அல்லது என் மீது கல்லெறிந்தாலோ, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று போலீசாரை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்” என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்