வேறு பெண்ணை திருமணம் செய்த கணவன் முகத்தில் ஆசிட் வீசிய மனைவி

சனி, 24 செப்டம்பர் 2016 (03:27 IST)
கணவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதை அடுத்து, அவரது மனைவி கணவனின் முகத்தில் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 
ஜம்மு மாநிலம் கதுவா மாவட்டம், பானி நகரத்தை சேர்ந்த மொஹமது டின் - ஷமீனா அக்தர். மொஹமது டின் அப்பகுதி காவல் நிலையம் ஒன்றில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
 
இந்நிலையில், மொஹமது டின் சமீபத்தில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஷமீனா தனது மகள் மற்றும் வேறு இருவரின் துணையுடன் அவரின் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார்.
 
இந்த ஆசிட் வீச்சில் மொஹமது பலத்த காயமடைந்தார். ஷமீனாவிற்கும் காயமேற்பட்டது. கணவன் - மனைவி இருவரும் கதுவா மாவட்ட துணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மொஹமது ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து பானி நகர போலீஸ் அதிகாரி சுரேஷ் கவுதம் கூறுகையில் “ஷமீனா மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் ஷமீனா கைது செய்யப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்