கேரளாவில் நின்று கொண்டிருந்த ரயிலில் பெண் எரித்துக் கொலை

செவ்வாய், 21 அக்டோபர் 2014 (17:53 IST)
கேரள மாநிலம், கண்ணூர் ரயில் நிலையத்தில் நேற்று காலை, நிறுத்தப்பட்டிருந்த விரைவு ரயிலில் பெண் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் எரித்துக் கொலை செய்தது பெரும் பரபரப்புக்குள்ளானது.
 
கண்ணூர் ரயில் நிலையத்தின் முதலாம் எண் நடைமேடையில் கண்ணூர்-ஆலப்புழா விரைவு ரயில் புறப்படுவதற்காக கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
 
அப்போது 13 ஆம் பெட்டியில் ஏறிய பெண் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் ஆல்கஹால் ஊற்றி தீ வைத்தனர். இந்த பயங்கர சம்பவம் அதிகாலை 4.30 மணியளவில் நடந்துள்ளது.
 
தீக்காயங்களுடன் அடையாளம் தெரியாத அந்தப் பெண்மணியை கோழிக்கோடில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் காலை 8.30 மணியளவில் பிரிந்தது.
 
அதன்பின், அந்தப் பெண் யார் என்பதை அடையாளம் தெரிந்து கொண்ட போலீஸ், அவர் பெயர் பாதுட்டி என்கிற கதீஜா (வயது 45) என்று கூறினர். இவரது கணவர் பெயர் ஹசன். இவர் மலப்புரத்தில் வசித்து வந்தார் என்ற தகவல்களை வெளியிட்டுள்ளது.
 
முதலில் தீக்காயங்களுடன் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதன் பிறகே கோழிக்கோடில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
 
கண்ணூரிலிருந்து ஆலப்புழா வரை செல்லும் அந்த விரைவு ரயில் தினமும் காலை 5 மணிக்குப் புறப்படும். நேற்று வழக்கமாக அந்த ரயில் 1 ஆம் நடைமேடையில் அரை மணி நேரம் முன்னதாக நிறுத்தப்பட்டுள்ளது. பெட்டிகளில் விளக்குகள் எரியவில்லை. இருட்டாகவே இருந்தது. அப்போதுதான் கதீஜா என்பவர் 13 ஆம் பெட்டியில் ஏறியிருக்கிறார்.
 
அவரைத் தவிர அந்தப் பெட்டியில் அப்போது ஒருவரும் இல்லை. இந்தச் சமயத்தைப் பயன்படுத்தி, பெட்டியில் ஏறிய மர்ம நபர்கள் ஆல்கஹாலை அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளனர். பிறகு அந்த மர்ம நபர்கள் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து ரயில் நிலையத்தின் கிழக்குப் புற நுழைவாயில் வழியே தப்பிவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் சிலர் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 
சம்பவத்திற்கு முன் கொலை நடந்த 13 ஆம் எண் பெட்டியில் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் நடந்ததாகவும் பிறகு எரிக்கப்பட்ட நிலையில் அந்தப் பெண் பெட்டியிலிருந்து நடைமேடையில் அலறிய படியே குதித்ததாகவும் நேரில் பார்த்த சில பயணிகள் கூறியிருக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்