‘ஊழல் குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் தண்டிக்கப்படுவார்கள்’ - உம்மன் சாண்டி

வெள்ளி, 13 நவம்பர் 2015 (15:28 IST)
‘ஊழல் குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவார்கள்’ என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.
 

 
பார் ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயல் தலைவர் பிஜூ ரமேஷ், நிதி அமைச்சர் கே.எம். மாணி மீது ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டினார். இது குறித்து விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில். தனது நிதி அமைச்சர் பதவியை மாணி ராஜினாமா செய்தார். புதிய நிதி அமைச்சர் நியமிக்கப்படும் வரை அந்த துறையினை முதல்வர் உம்மன் சாண்டி கவனிப்பார்.
 
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் உம்மன் சாண்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் கூறுகையில், “ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் மூலம் அரசின் செயல்பாடுகளை முடக்க யாரும் முயற்சிக்க வேண்டாம். மாணி தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் உண்மையை நிரூபித்து மீண்டும் அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்று நம்புகிறேன்.
 
ஊழல் குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள். பார பட்சமின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் பாபு மீது, பிஜூ ரமேஷ் கூறிவரும் குற்றச் சாட்டு ஆதாரமற்றது” என்றார்.
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்