’நான் தூதராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்தியா மகத்தான நாடுதான்’ - ஆமிர் கான் பெருமிதம்

வெள்ளி, 8 ஜனவரி 2016 (14:19 IST)
நான் விளம்பரத்திற்கான தூதராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இந்தியா மகத்தான நாடாகவே இருக்கும் என்று பாலிவுட் நடிகர் ஆமிர் கான் பெருமைப்பட்டுள்ளார்.
 

 
இந்திய சுற்றுலாத் துறையை பிரபலப்படுத்தும் வகையில், மத்திய அரசு ’மகத்தான இந்தியா’ (incredible india) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நியமிக்கப்பட்டிருந்தார்.
 
இதற்கிடையில், கடந்த ஆண்டு ஆளும் மத்திய அரசு சகிப்பின்மை காரணமாக கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மாட்டுக்கறி வைத்திருந்ததன் பேரில், உத்திரப்பிரதேசத்தின் தாத்ரியில் முஸ்லீம் முதியவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
 
மும்பையில், பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலியின் இசைக்கச்சேரி நடத்த இருந்ததற்கு சிவ சேனா எதிர்ப்பு தெரிவித்தது. எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டனர். நடிகர் க்ரிஷ் கர்நாட்டிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தேறியது.
 
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் பேசும்போது, "இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாதுகாப்பு இல்லாத அசாதாரண நிலை நிலவுகிறது. பாதுகாப்பில்லாத சூழலை மக்கள் அவ்வப்போது உணர்ந்து வருகின்றனர்.
 
சில நாள்கள் முன்பு என் மனைவி கிரண் என்னிடம், நாம் வேறு நாட்டிற்கு சென்று விடுவோமா, குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று கூறினார். கிரண் பயப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை" என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில், மத்திய அரசின் `மகத்தான இந்தியா’ என்ற விளம்பரத்திற்கான தூதர் பதவியில் இருந்து ஆமிர்கான் நீக்கப்பட்டார். இதுகுறித்த அரசின் முடிவை தான் மதிப்பதாக நடிகர் ஆமீர்கான் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து மும்பையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆமீர்கான், “நான் எவ்வித பிரதிபலனும் பாராமல், நாட்டின் பெருமையை விளம்பரப்படுத்தும் `மகத்தான இந்தியா’ என்ற மத்திய அரசின் சுற்றுலாத்துறை விளம்பரப்படத்தில் இலவசமாக நடித்து வந்தேன்.
 
தற்போது நான் நடிக்கக்கூடாது என்று அரசு எடுத்துள்ள முடிவை நான் மதிக்கிறேன். விளம்பரப்படுத்துவதற்கு யார் தூதராக இருப்பது என்பதை தீர்மானிக்கும் உரிமை அரசுக்குத்தான் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக `மகத்தான இந்தியா’ என்ற விளம்பரத்தில் நாட்டின் தூதராக சேவை செய்ததற்கு பெருமை கொள்கிறேன்.
 
என்னுடைய நாட்டிற்கு சேவை செய்வதில் நான் மகிழ்ச்சி அடைந்திருந்தேன். இப்போது மட்டுமல்ல எப்போது அழைத்தாலும் நான் சேவை செய்ய தயாராக இருக்கிறேன். நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
 
இதுவரை பொதுச்சேவைக்காக நான் நடித்த திரைப்படங்களில் இலவசமாகவே நடித்துள்ளேன். நான் விளம்பரத்திற்கான தூதராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இந்தியா மகத்தான நாடாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்