ஜெ. வழக்கில் மேல்முறையீடு விசாரணை எப்போது?

செவ்வாய், 30 ஜூன் 2015 (15:07 IST)
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை எப்போது வரவிருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளித்ததோடு, அவருக்கு 4 வருட சிறைதண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. அதேபோல், ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாரகன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபரதாமும் விதித்தது.
 
பின்னர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து, நீதிபதி லோக்கூர், சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த அக்டோபர் 17ஆம் தேதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த வழக்கில் இம்மாதம் மே - 11ஆம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை முழுமையாக விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்து உத்தரவிட்டார். மேலும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலை அளிக்கப்பட்டது. இதுதவிர, ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டது.
 
இதனையடுத்து ஜூன் 1ஆம் தேதி நடைபெற்ற கர்நாடகா அமைச்சரவை கூட்டத்தில், ஜெயலலிதாவின் வழக்கை மேல்முறையீடு செய்ய கர்நாடகா அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதன்படி, ஜூன் - 6ஆம் தேதி பெங்களூரு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யும் என கர்நாடக அரசு அரசாணை பிறப்பித்தது.
 
விசாரணை எப்போது?
 
இந்நிலையில், இம்மாதம் 23ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில்  2377 பக்கங்களுடன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மேல் முறையீட்டு மனு ஜூலை முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
 
கோடை விடுமுறைக்குப் பின், உச்ச நீதிமன்றத்தின் வழக்கமான நடவடிக்கைகள் ஜூலை 1ஆம் தேதி துவங்குவதால் அந்த வாரத்தில், ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து, கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்