”மோடி மதுரா வரும்போது கொல்லப்படுவார்”: பிரதமருக்கு கொலை மிரட்டல்!

திங்கள், 25 மே 2015 (11:53 IST)
”மோடி மதுரா வரும்போது கொலை செய்யப்படுவார்”என பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

 
பிரதமர் நரேந்திர மோடி நாளை உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா செல்கிறார். அங்குள்ள நாக்லா சந்திரபான் கிராமத்தில் நடக்கும் பாஜக அரசின் ஓராண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
 
இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி, மதுரா நகர காவல்துறை உயர் அதிகாரியின் செல்போனுக்கு, 'மதுரா வரும்போது நரேந்திர மோடி கொலை செய்யப்படுவார்' என வாட்ஸ்அப்பில் மிரட்டல் செய்தி வந்தது. இதையடுத்து, செய்தி அனுப்பப்பட்ட செல்போன் நம்பரை ஆய்வு செய்து, மிரட்டல் விடுத்த நபரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
 
இதில், மோடிக்கு மிரட்டல் செய்தி அனுப்பியவர், மதுரா மாவட்டம், நவ்லி கிராமத்தைச் சேர்ந்த ராம்வீர் என்பவர் எனத் தெரியவந்தது. அவர் போலி பெயரில் சிம்கார்டு வாங்கி மிரட்டல் விடுத்திருந்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த நபர் ஓடி தலைமறைவாகி விட்டார்.
 
இதையடுத்து. ராம்வீரின் சகோதரர் லட்சுமணனை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான ராம்வீரையும் வலைவீசித் தேடி வருகின்றனர்.
 
உத்தரப் பிரதேசம் செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்