உயிரிழந்தவர்களை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது: அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா குற்றச்சாட்டு

செவ்வாய், 7 ஜூலை 2015 (04:29 IST)
உயிரிழந்தவர்களை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்வதாக மத்திய பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா குற்றம் சாட்டியுள்ளார். 
 

 
வியாபம் மோசடியில் தொடர்புடைய பலர் தொடர்ந்து மர்மமான முறையில் மரணமடைந்து வருகின்றனர். இது குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றது. 
 
இந்த நிலையில், இது குறித்து, மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
 
டாக்டர் சர்மா மிகவும் நல்லவர். அவருடைய மரணத்துக்கும் வியாபம் மோசடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. குடும்ப பிரச்னை காரணமாகத்தான்  பயிற்சி பெண் எஸ்.ஐ. தற்கொலை செய்து கொண்டார்.
 
ஆனால், இதை மறைத்துவிட்டு, வியாபம் மோசடி வழக்குக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பது போல வீண் பழியை போட்டு, அவர்களை சிலர் அவமரியாதை செய்கின்றனர். உயிரிழந்தவர்களை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தற்போது தேவை ஆறுதல் மட்டுமே. அதை எங்கள் அரசு செய்யும் என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்