விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை திரும்ப பெற அமலாக்கத்துறை கடிதம்

வியாழன், 14 ஏப்ரல் 2016 (08:59 IST)
விஜய் மல்லையா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவருவதால், அவருடைய பாஸ்போர்ட்டை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.


 

 
விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9000 கோடி கடன் வாங்கி, வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறி மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
 
இந்நிலையில் மல்லையா கடந்த மாதம் 2 ஆம் தேதி டெல்லி மேல்–சபை எம்.பி. என்கிற தனது அந்தஸ்தை பயன்படுத்தி சிறப்பு பாஸ்போர்ட்டில் இங்கிலாந்திற்குச் சென்றுவிட்டார்.
 
அமலாக்கத்துறை அவரை விசாரணைக்காக ஆஜராகும்படி 3 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் மும்பையில் உள்ள மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜராகவில்லை.
 
இதையடுத்து மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அமலாக்கத்துறை ஒரு கடிதம் எழுதியுள்ளது.
 
அந்த கடிதத்தில், "அமலாக்கத்துறையின் விசாரணைக்கு விஜய் மல்லையா ஒத்துழைக்க மறுத்துவருகிறார். எனவே அவருடைய பாஸ்போர்ட்டை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்