உத்தரகாண்ட் கனமழை: 400 மாணவர்களுடன் சிக்கிய ராம்தேவ்

வியாழன், 17 ஜூலை 2014 (12:19 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் கன மழை பெய்து வரும் நிலையில், அங்கு 400 மாணவர்களுடன் சென்றுள்ள யோகா வகுப்புகள் நடத்தும் ராம்தேவ் திரும்ப வழியில்லாமல் சிக்கியுள்ளார். 
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழைக் காரணமாக சொனப்ரயாக்-கேதார்நாத், ருத்ரபிரயாக்-கவுரிகுந்த் பகுதிகளில் நிலச் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், அலக்நந்தா, மந்தாகினி ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்நிலையில், இரு நாட்கள் பலத்த மழைப் பொழியும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை மீறி, 400 மாணவர்களுடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற ராம்தேவ் கங்கோத்ரியில் இருந்து திரும்ப முடியாத நிலையில் சிக்கியுள்ளார். 
 
ராம்தேவ் அவருடன் அழைத்து சென்ற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், ராம்தேவ் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரகாண்ட் டிஜிபி தெரிவித்துள்ளார். 
 
கடந்த ஆண்டு உத்தரகாண்ட்டில் பெய்த பேய் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரையும், உடைமைகளையும்  இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்