புதுச்சேரியில் ஐ.நா. சபை கொடி தீவைத்து எரிப்பு

புதன், 7 அக்டோபர் 2015 (01:38 IST)
புதுச்சேரியில் ஐ.நா. சபை கொடி தீவைத்து எரித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
ஈழத்தமிழர் படுகொலை விவகாரத்தில், போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ள இலங்கை மீது பன்னாட்டு விசாரணையை ஐ.நா. சபையில் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக பெரியார் சிந்தனையாளர் இயக்கம் மற்றும் தமிழர் இயக்கம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
 
இதனையடுத்து, மேற்கண்ட காரணங்களுக்காக, இந்திய அரசை கண்டித்து புதுவை கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும் அந்த அமைப்புகள் அறிவித்தனர். அது போல, சிங்காரவேலர் சிலை முன்பு திரண்டு, அங்கிருந்து புதுச்சேரி கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் அண்ணா சாலை, நேரு வீதி வழியாக கவர்னர் மாளிகை நோக்கி சென்றடைந்தது.
 
ஊர்வலம், ஆம்பூர் சாலை அருகே வந்த போது அவர்களை, போலீசார்  தடுத்து நிறுத்தினார்கள். இதனால், அவர்களுக்கும் போலீசாருக்கும்  இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் ஐ.நா. அமைப்பின் கொடியை சிலர் தீவைத்து எரித்தனர். இந்த செயலில் ஈடுபட்ட 84 பேரை போலீசார் கைது செய்தனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்