மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், அஸ்வினி வைஷ்ணவ், பூபேந்தர் யாதவ் உள்ளிட்டோர் தங்களது அமைச்சகங்களுக்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவி ஏற்றார். கடந்த ஒன்பதாம் தேதி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள் பதவியேற்றனர். இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில் 30 மத்திய அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதற்கிடையே மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர் யாதவ் உள்ளிட்டோர் தங்களது அமைச்சகங்களுக்கு சென்று இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.