பழைய ரூபாய் நோட்டு வைத்திருந்தால் 4 ஆண்டு சிறை! - மத்திய அரசு அதிரடி சட்டம்
வியாழன், 29 டிசம்பர் 2016 (06:53 IST)
மார்ச் 31ஆம் தேதிக்குப் பின், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனையும், அவர்கள் வைத்திருந்த தொகையைப் போல 5 மடங்கு கூடுதல் தொகை அபராதம் விதிக்கவும் மோடி அரசு முடிவெடுத்துள்ளது.
கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில், நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, கடந்த நவம்பர் 8-ஆம்தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது.
பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கிகளில் ஒப்படைத்து, அதன் மதிப்பிற்கு இணையான வேறு ரூபாய்நோட்டுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும்; அவ்வாறு மாற்றிக் கொள்ளாவிட்டால், ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை ரிசர்வ் வங்கிகளுக்கு சென்றால்தான் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியும் என்றும் மோடி அரசு கூறியது.
அந்த வகையில், வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கு, மோடி அரசு விதித்த கெடு, வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் வைத்திருப்பவர்களுக்கு, அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில், அவசரச் சட்டம் ஒன்றை மோடி அரசு கொண்டு வந்துள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில், புதன்கிழமையன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், புதிதாக கொண்டு வரப்படும் அவசரச் சட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி, டிசம்பர் 31 முதல் பொதுமக்கள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருக்கக் கூடாது; அவற்றை ரிசர்வ் வங்கிகளில் 2017 மார்ச் 31-க்குள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், 10 தாள்களுக்கு மேல் பழைய 500, 1000 வைத்திருந்தால் சராசரியாக ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை அபராதமாக விதிக்கப்படலாம்.
ஒருவரிடமிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் எந்த அளவுக்கு பிடிபடுகிறதோ, அதைப்போல 5 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும். மிக அதிகமான தொகையை வைத்து இருப்பவர்களுக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை இருக்கும்.