காஷ்மீர் நடிகை சுட்டுக்கொலை - பாதுகாப்புப் படை நடத்திய அதிரடி வேட்டை!

வெள்ளி, 27 மே 2022 (10:02 IST)
ஸ்ரீநகரின் சௌரா பகுதியில் 2 தீவிரவாதிகளையும் காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் 2 தீவிரவாதிகளையும் பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றது. 

 
ஜம்மு காஷ்மீர் புத்காம் மாவட்டத்தில் உள்ள ஹஷ்ரூ சதுரா என்ற பகுதியில் உள்ள வீட்டில் அம்ரீன் பட் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் காஷ்மீரில் வெளியாகி வரும் டிவி சீரியல் ஒன்றில் நடித்து வந்துள்ளார். 
 
இந்நிலையில் அம்ரீன் பட் வீட்டிற்கு திடீரென புகுந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் அம்ரீன் பட்டை சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த தாக்குதலின்போது வீட்டில் இருந்த 10 வயது சிறுவனுக்கும் காயம்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு காஷ்மீர் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அம்ரீன் பட் குடும்பத்தினருக்கு தனது இரங்கல்களையும் தெரிவித்துள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து ஸ்ரீநகரின் சௌரா பகுதியில் 2 தீவிரவாதிகளையும் காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் 2 தீவிரவாதிகளையும் பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றது. இதில் அவந்திபோரா பகுதியில் பலியான 2  தீவிரவாதிகள் தொலைக்காட்சி நடிகை அம்ரீன் படுகொலையில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்துள்ளது. 
 
இவர்கள் இருவரும் ஷாகித் முஷ்டாக் பட் மற்றும் பர்ஹான் ஹபீப் என அடையாளம் தெரிந்தது. லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தளபதி லத்தீப் உத்தரவின் பேரில் அவர்கள் அம்ரீனை சுட்டு கொன்றது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து ஏ.கே. 56 ரக துப்பாக்கி ஒன்று, ஒரு பிஸ்டல் மற்றும் பிற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்