வெளிநாட்டு சுற்றுலா பயணியை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

சனி, 5 செப்டம்பர் 2015 (12:29 IST)
ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய  நெடுஞ்சாலையில் கடந்த பிப்ரவரியில் ஒரு  ஜப்பானிய சுற்றுலா பயணியை கற்பழித்த  வழக்கில் மூன்று பேருக்கு ஜெய்ப்பூர்  நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல்  சிறை தண்டனை நேற்று வழங்கியது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி அஜித்  சிங் சௌத்ரி, அவரது நண்பர்கள் அப்ரார்  மற்றும் வாஹித் ஆகியோருக்கு பிரிவு 376  D (கும்பல் கற்பழிப்பு) கீழ் 20 ஆண்டுகள்  கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் ராமவீர், சிவராஜ் மற்றும் ராம்ராஜ்  ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தர்மவீர், ரவீந்திரா மற்றும் ராஜ்வீர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர் என அரசு சிறப்பு  வழக்கறிஞர் பி.எஸ் சவுகான் கூறினார்.

இந்த ஜப்பானிய பெண் ஜெய்ப்பூரிலிருந்து 50  கி.மீ யில் உள்ள ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் மொசமபாத் அருகே பிப்ரவரி 8 ஆம் தேதி இரவில் கற்பழிக்கப்பட்டார். சவுத்ரி தன்னை ஒரு சுற்றுலா வழிகாட்டி என்று அவரிடம் அறிமுகம் செய்து கொண்டு தனது  மோட்டார் சைக்கிளில் பகல் நேரத்தில் சில  சுற்றுலாத் தளங்களுக்கு அவளை அழைத்து  சென்றுள்ளான். பின்னர் இரவு நேரத்தில் மொசமபாத் கிராமத்தில் உள்ள ஒரு வனாந்திரத்தில் அவளை கற்பழித்துள்ளான். இந்த வழக்கில் அவன் பிப்ரவரி 13 அன்று காவல் துறையிடம் பிடிபட்டான்.

குற்றப்பத்திரிக்கை சம்பவம் நடந்த இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிக்கையில் ஒன்பது பேர் மீது பல்வேறு பிரிவுகளில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டது. ஆறு மாத விசாரணைக்கு பின் நேற்று இந்த வழக்கில் தீப்பு வழங்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்