தங்க சங்கிலியை திருடியவனுக்கு 48 வாழைப்பழங்கள்

திங்கள், 11 ஜனவரி 2016 (16:18 IST)
மும்பையில் தங்க சங்கிலியை திருடியவனிடமிருந்து அதை மீட்க மும்பை காவல் துறையினர் 48 வாழைப்பழங்களை உண்ணவைத்து தங்கத்தை மீட்க முயற்சி மேற்கொண்டனர்.


 
 
மும்பையில் கட்கோபர் கிழக்கு மீன் சந்தையில் புதன் கிழமை இரவு ஒரு பெண்ணிடம் இருந்து 25 கிராம் மதிப்புள்ள தங்க சங்கிலியை கோபி ஆர் கவரே என்பவன் பறித்துவிட்டு ஓடியுள்ளான்.
 
சங்கிலியை பறிகொடுத்த பெண் சத்தம்போட்டு அனைவரையும் கூப்பிட அருகில் இருந்தவர்கள் திருடனை பிடித்து அடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
 
காவல் துறையினர் அவனை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து எக்ஸ்ரே எடுத்ததில் அவனது வயிற்றில் உலோக பொருள் இருப்பது தெரிந்தது. இந்த எக்ஸ்ரேவை காவல் துறையினர் அவன் மீதான ஒரு ஆதாரமாக பதிவு செய்தனர்.
 
காவல் துறையினர் வியாழன் கிழமை மாலை மேலும் ஒரு எக்ஸ்ரே எடுத்து அவன் வயிற்றில் தங்க சங்கிலி இருப்பதை உறுதி செய்த பின்னர், ஒரு கூடை வாழைப்பழத்திற்கு காவல் துறையினர் உத்தரவிட்டனர்.
 
அந்த வாழைப்பழங்களை வெள்ளிக்கிழமை காலை வரை அவனை கட்டாயப்படுத்தி உண்ண வைத்தனர் காவல் துறையினர். 48 வாழைப்பழங்களுக்குப் பின் இறுதியாக அவனின் வயிற்றில் இருந்து தங்க சங்கிலியை வெளியேற்றினர்.
 
பின்னர் காவல் துறையினர் அவனை கைது செய்து, மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்தனர். மும்பை காவல் துறையினருக்கு இந்த வாழைப்பழ வைத்தியம் முதல் முறையல்ல.

வெப்துனியாவைப் படிக்கவும்