ஜெயலலிதா வழக்கில், சட்டத்துறை அறிக்கை கிடைத்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை - சித்தராமையா

சனி, 23 மே 2015 (13:06 IST)
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக அரசின் சட்டத்துறை அறிக்கை கிடைத்த பிறகுதான் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு செய்ய இயலும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார். 
 
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து  விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 11 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. 
 
இந்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று  திமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள், கர்நாடக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
 
மேலும், இந்த கருத்தை பிரதிபலிக்கும் வகையில், கர்நாடக அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா மற்றும் அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார் ஆகியோரும் கர்நாடக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். 
 
இந்நிலையில், தமிழக முதலமைச்சராக இன்று காலை 11 மணிக்கு ஜெயலலிதா   முதலமைச்சராக மீண்டும் பொறுப்பெற்றுக் கொண்டார்.  
 
இது குறித்து டெல்லியில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எங்களது சட்டத்துறை ஆய்வு செய்து வருகிறது. சட்டத்துறை அறிக்கை கிடைத்த பிறகுதான் மேல்முறையீடு செய்வது குறித்து  அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்