மல்லயாவை முதலில் பிடியுங்கள் : வாதாடிய பெண் சிறைக்கு சென்றார்

வியாழன், 24 மார்ச் 2016 (15:35 IST)
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயனம் செய்து, டிக்கெட் பரிசோதகரிடம்   ‘முதலில் மல்லையாவை பிடியுங்கள், நான் அபராதம் கட்டுகிறேன்’ என்று கூறிய பெண், நீதிமன்றத்தில் அபராதம் கட்ட மறுத்து சிறைக்கு சென்றார்.
 
மும்பையில் உள்ள மகாலட்சுமி ரயில்நிலையத்தில் பெண் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் தனது பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பிளாட்பாரத்தில் பிரேமலதா என்ற ஒரு பெண் வந்தார். அவரை மறித்து டிக்கெட்டை கேட்டுள்ளார். ஆனால் அவரிடம் டிக்கெட் இல்லை.
 
இதைத் தொடர்ந்து,  டிக்கெட் பரிசோதகர் பிரேமலதாவிடம் டிக்கெட் இன்றி பயணம் செய்ததற்காக ரூ.260 அபராதமாக செலுத்தும்படி கூறினார். ஆனால் அவர் ரூ. 9 ஆயிரம் கோடி கடனை செலுத்தாமல் தப்பியோடிய விஜய்  மல்லையாவை பிடியுங்கள் பிறகு நான் அபராதம் கட்டுகிறேன் என்று கூறினார். இது குறித்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
பின்னர், பொறுமையிழந்த அந்த பெண் டிக்கெட் பரிசோதகர் பிரேமலதாவை ஸ்டேசன் மாஸ்டர் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த பெண்ணிடம் ரயில்வே அதிகாரி அபராதம் கட்டச் சொல்லியுள்ளார். ஆனால், அந்த பெண் அபராதம் செலுத்த மறுத்து, இதையே தொடர்ந்து கூறியுள்ளார்.
 
இது குறித்து ரயில்வே காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ரயில்வே காவலர்கள் பிரேமலதாவிடம் அபராதம் செலுத்திவிட்டு செல்லுமாறும், இல்லாவிட்டால் சிறைக்கு செல்ல வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் சொன்னதையே திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். இதையடுத்து ரயில்வே காவலர்கள் பிரேமலதாவின் கணவரிடம் போனில் தொடர்பு கொண்டனர்.
 
ஆனால், இந்த விதத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று கணவரிடம் கண்டிப்பாகக் கூறினார். ரூ.260 அபராதம் செலுத்தாமல் சுமார் 12 மணி நேரம் போராடினார் பிரேமலதா. 
 
அதனால் வேறு வழியின்றி அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். நீதிபதியிடமும் அபராதம் கட்ட மறுத்த அந்த பெண், சிறைக்கு செல்வ தயாரக இருப்பதாக கூறி, ஒரு வாரம் தண்டனை பெற்று சிறைக்கு சென்றுவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்