கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்து வந்த பாஜக-தெலுங்கு தேச கூட்டணி முறிந்துவிட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இதனையடுத்து தெலுங்கு தேசத்தை சேர்ந்த விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஒய்.எஸ்.செளதரி ஆகியோர் இன்று ராஜினாமா செய்யவுள்ளனர்
புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சி கடந்த நான்கு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஆந்திராவின் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து ஆந்திர மாநில மக்களின் நன்மைக்காக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்
மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் விலகுவது போல் ஆந்திராவில் அமைச்சர்களாக உள்ள பாஜக எம்.எல்.ஏக்களான ஸ்ரீனிவாச ராவ், டி.மாணிக்யாலா ராவ் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து பதிலடி கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அளவில் அமையவிருக்கும் மூன்றாவது அணியில் தெலுங்கு தேச கட்சி இணையும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. திமுக, தெலுங்குதேசம், சந்திரசேகர ராவ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து அகில இந்திய அளவில் 3வது அணி அமைக்க திட்டமிட்டு வருகிறது. இந்த அணி, பாஜகவுக்கு கடும் சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.