பணி நீக்கம் இல்லை; சம்பள உயர்வும் இல்லை! – டிசிஎஸ் அறிவிப்பு!

வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (10:17 IST)
கொரோனா எதிரொலியால் பல்வேறு ஐடி துறைகளில் வேலையிழப்பு ஏற்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் எண்ணம் இல்லை என டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறைகள் பலவும் முடங்கியுள்ளதால் பல நாடுகளில் வேலையிழப்புகள் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா சார்ந்த ஐடி நிறுவனங்கள் மற்ற நாடுகளிலிருந்து பணிபுரியும் ஊழியர்களை கணிசமான அளவில் குறைக்க பேசி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் கோபிநாதன் பேசுகையில் ”கொரோனா பாதிப்பை காரணமாக கொண்டு ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் எண்ணம் இல்லை. அடுத்த இரண்டு காலாண்டிற்கு நிறுவனத்தின் செயல்பாடுகள் மிகவும் கடினமானதாக இருக்கும் என்பதால் இந்த நிதியாண்டில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க இயலாது “ என்று தெரிவித்துள்ளார். அதேசமயம் கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்பட்ட 40 ஆயிரம் மாணவர்கள் வேலையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்