தாஜ்மஹாலை சன்னி முஸ்லிம்களின் வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் - அசம் கான்

சனி, 22 நவம்பர் 2014 (09:58 IST)
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சன்னி முஸ்லிம்களின் மத்திய வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தர பிரதேச மாநிலத்தின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அசம் கான் கூறியுள்ளார்.
 
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் அமைந்துள்ள தாஜ்மஹாலின் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாடு மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
 
இதுபற்றி உத்தர பிரதேச மாநிலத்தின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், அசம் கான் கூறுகையில், “தாஜ்மஹாலை மத்திய அரசு தொடர்ந்து தனது கட்டுப்பாட்டின் வைத்திருப்பது கண்டனத்துக்குரியது.
 
தாஜ்மஹால் மூலம் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. இதை முஸ்லிம்களின் கல்விக்காக செலவிட வேண்டும். இந்த பணத்தை கொண்டு 2 பல்கலைக்கழகங்களை நாட்டில் நடத்த முடியும்.
 
எனவே, தாஜ்மஹாலை சன்னி முஸ்லிம்களின் மத்திய வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி செய்தால் அவர்களே ஒரு நிஜாமை நியமித்து கிடைக்கும் வருவாயை முஸ்லிம்களின் கல்விக்காக பயன்படுத்திக்கொள்ள இயலும்“ என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்.
 
இதுபற்றி பாஜக வின் செய்தி தொடர்பாளர் விஜய் பகதூர் பதக் கூறுகையில், “இது போன்ற கருத்துகள் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் குழப்பத்தையே ஏற்படுத்தும். தாஜ்மஹால் விஷயத்தில் அரசியலை புகுத்துவது கண்டனத்துக்குரியது“ என்று கூறியுள்ளார்.
 
தாஜ்மஹால் மொகலாய மன்னர் ஷாஜகான், தனது மனைவி மும்தாஜின் நினைவாக 1654 ஆம் ஆண்டு கட்டியதாகும். முழுவதும் சலவைக் கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட தாஜ்மகாலை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்