வெளியுறவுச் செயலாளர் மாற்றம் விவகாரத்தில் அரசியல் குறுக்கீடு இல்லை : சுஷ்மா சுவராஜ் விளக்கம்

வெள்ளி, 30 ஜனவரி 2015 (15:09 IST)
வெளியுறவுச் செயலாளர் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் எவ்வித அரசியல் குறுக்கீடும் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர் ஜெய்சங்கரை வெளியுறவு செயலராக நியமனம் செய்யும் முடிவில் தம்முடைய பங்கும் இருந்ததாக கூறியுள்ளார். மேலும் ஜெய்சங்கரை வெளியுறவு செயலராக நியமனம் செய்ய அரசு விரும்புவதாக சுஜாதா சிங்கிடம் தாம் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2013 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் சுஜாதா சிங் வெளியுறவு செயலராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் முடிய இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் வெளியுறவுச் செயலாளர் பதவியிலிருந்து அவரை மத்திய அரசு அதிரடியாக நீக்கியது.
 
இதனையடுத்து அமெரிக்காவிற்கான இந்திய தூதராக பணியாற்றிய ஜெய்சங்கர் நேற்று வெளியுறவு செயலராக பதவியேற்றுக் கொண்டார். வரும் 31 ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற உள்ள ஜெய்சங்கர், திடீரென வெளியுறவு செயலராக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்