பவானி சிங்கை நீக்கக் கோரும் திமுக மனு: ஜெயலலிதா மற்றும் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

திங்கள், 9 மார்ச் 2015 (15:29 IST)
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இருந்து பவானி சிங்கை நீக்கக் கோரும் திமுக மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மார்ச் 18ஆம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு ஜெயலலிதாவுக்கும், கர்நாடக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளதால், அவர்கள் வெளியில் இருந்தபடி வழக்கை நடத்தி வருகின்றனர்.
 
மேல்முறையீட்டு வழக்கில் உதவி செய்ய முன்வந்த திமுகவின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவில், உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் மேல்முறையீடு விசாரணை முறையாக நடக்காததால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. மேலும், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
 
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகூர், கோயல் தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட நான்கு பேரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 
இருப்பினும் கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் மேல் முறையீட்டு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்